Last Updated : 13 Mar, 2021 10:16 PM

 

Published : 13 Mar 2021 10:16 PM
Last Updated : 13 Mar 2021 10:16 PM

முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களை வரவேற்பதில் கட்சியினர் ஆரவாரம்: நெல்லை எழுச்சி தினத்தில் வஉசி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு

திருநெல்வேலி

திருநெல்வேலியில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சிகளில் கட்சியினரின் ஆரவாரமும், அமர்களமும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் தங்களுக்கான சீட் பெறுவதற்காக கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டிருந்தனர். வேட்பாளர் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே திருநெல்வேலியில் முக்கிய சந்திப்புகளில் கட்சியினர் திரண்டு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சீட் கிடைத்துள்ள மகிழ்ச்சியுடன் வேட்பாளர்கள் தங்கள் சொந்த தொகுதிகளுக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு செண்டை மேளம், ஆளுயர மாலை, பொன்னாடைகள் என்றெல்லாம் வரவேற்பு அளிப்பதில் கட்சியினரிடையே உற்சாகம் கரைபுரண்டது. வேட்பாளரை வரவேற்க கட்சியினர் ஏராளமான வாகனங்களில் அணிவகுத்தனர்.

தொகுதிக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் தலைவர்கள் சிலைக்குகளுக்கு மாலை அணிவித்த கையோடு வாக்கு சேகரிப்பையும் வேட்பாளர்கள் தொடங்கியிருக்கிறார்கள். வேட்பாளர்களின் இந்த ஆரவராமும், அமர்களமும், வாகன அணிவகுப்பும் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை பாதிப்படைய வைத்திருந்தது. பொதுமக்களுக்கு இடையூறுகளையும் ஏற்படுத்தியிருந்தது. இதை தேர்தல் அலுவலர்கள் கவனத்தில் கொண்டார்களா என்பது குறித்து பொதுமக்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.

நெல்லை எழுச்சி தினத்தில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு

திருநெல்வேலியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து சாதி, சமயம் கடந்து சாமானிய மக்கள் வீதிக்கு வந்து போராடிய திருநெல்வேலி எழுச்சி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தினத்தையொட்டி திருநெல்வேலியில் மாநகராட்சி அலுவலகம் எதிரே பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள வ.உ.சி. மண்டபத்தில் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் கூடி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் எளிய நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படும். அந்தவகையில் இவ்வாண்டும் திருநெல்வேலி எழுச்சி தினத்தையொட்டி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்க மணிமண்டபத்துக்கு சென்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி தன்னார்வலர்கள் தடுக்கப்பட்டனர். மண்டபம் மூடப்பட்டது. ஒருசிலரை அனுமதித்தால் கட்சியினர் திரண்டுவந்துவிடுவார்கள் என்று காரணம் சொல்லப்பட்டது. இது அங்கு சென்ற அரசியல் சார்பற்ற தன்னார்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து எழுத்தாளர் நாறும்பூநாதன் கூறும்போது, வரலாற்று சிறப்புமிக்க திருநெல்வேலி எழுச்சி தினத்தில் வ.உ.சி. சிலைக்கு மாலைபோடுவதற்கும் தேர்தல் நடத்தை விதிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை. இந்த தினத்தின் முக்கியத்துவத்தை உணராமல் உள்ளனர். வ.உ.சி-க்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.

வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்க அதிகாரிகள் தடைவிதித்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தலைவர்களின் சிலைகளுக்கு பெரும் கூட்டமாக சென்று மாலை அணிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிதா பள்ளியில் உறுதிமொழி ஏற்பு

வ.உ.சி மணிமண்டபத்தில் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியில் திருநெல்வேலி எழுச்சி தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி எளிமையாக நடத்தப்பட்டது. இப்பள்ளியில் பாரதியார் பயின்ற வரலாற்று சிறப்புமிக்க வகுப்பறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் உலகநாதன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் முருக முத்துராமன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் சொக்கலிங்கம், சோமசுந்தரம், பார்வதி, விஸ்வநாதன், சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருநெல்வேலி எழுச்சி தினத்தை குறித்து சிற்றுரையும், தேச ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x