

திருச்சி தாயுமானசாமி கோயில் சமையல் பணியாளர் நியமனம் தொடர்பான அறிவிப்பாணை திரும்பப் பெறப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானாசாமி திருக்கோயிலில் சமையல் பணியாளர் மற்றும் நெய்வேத்திய பணியிடங்களுக்கு பிராமணர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என அறநிலையத்துறை ஜன. 12-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
இதை ரத்து செய்யக்கோரி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பில் ரெங்கநாதன், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் அர்ச்சகர் பயிற்சி முடித்த பிராமணர் அல்லாத நான் உட்பட 203 பேர் 14 ஆண்டுகளாக அர்ச்சகர் பணிக்காக காத்திருக்கிறோம்.
அர்ச்சகர் பணி நியமனத்துக்கு காத்திருப்பதுடன் கோவில் பணி நியமனங்களில் பிற சாதியினருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும் போராடி வருகிறோம். இந்நிலையில் கோயில் சமையல் பணியாளர் பணிக்கு பிராமணர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பாணை சட்டவிரோதம். அதை ரத்து செய்ய வேண்டும். அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப்பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், அறநிலையத்துறை அறிவிப்பாணை திரும்ப பெறப்பட்டுள்ளது என்றார்.
இதை பதிவு செய்து கொண்டு மனுதாரர் கோரிக்கை நிறைவேறியிருப்பதால், வேறு உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.