

தனியார் பால் விலை உயர்ந்துள்ள நிலையில் ஆவின் பாலின் விலையும் உயரக்கூடும் என்று பால் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதி யில் தினமும் 11. 5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் செய்யப் படுகிறது. இதில் 7 லட்சம் லிட்டர் பால், மாதாந்திர பால் அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கும். 4.5 லிட்டர் பால் விநியோகஸ்தர் களுக்கும் விற்பனை செய்யப் படுகிறது. தனியார் பால் நிறுவனங்கள் கடந்த 8 மாதங்களில் 4 முறை பால் விலையை உயர்த்தி உள்ளன. தமிழக அரசு ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்திய போதிலும் விற்பனை விலையை உயர்த்தாமல் இருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாடு பால் விற்பனை விநியோகஸ்தர்கள் சங்கத்தினர், ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்த அதன் நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பால் விலையை உயர்த்துவதற்கான எந்த முடிவையும் தற்போது வரை ஆவின் நிர்வாகம் எடுக்கவில்லை. ஆவின் பால் விலையை உயர்த்துவது என்பது அரசின் கொள்கை முடிவு ஆகும். தற்போது வழங்கப்பட்டு வரும் ஆவின் விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.