

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சீட் கேட்டு தேவகோட்டையில் ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டு வேலுச்சாமி ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.
திமுக கூட்டணியில் காரைக்குடி தொகுதி காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு சங்கராபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் மாங்குடி, தொழிலதிபர் படிகாசு மகன் பாலு, தேவகோட்டை முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுச்சாமி ஆகியோர் முயன்று வருகின்றனர். அவர்களில் மாங்குடிக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வடக்கு வட்டார பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார். ஆனால் கூட்டத்திற்கு பொறுப்பாளர்கள் பலர் வரவில்லை. இதுகுறித்து கட்சியினரிடம் ப.சிதம்பரம் கேட்டபோது, மஞ்சுவிரட்டிற்கு சென்றுவிட்டதாக மற்ற நிர்வாகிகள் கூறினர்.
இதனால் அதிருப்தி அடைந்த ப.சிதம்பரம், ‘தேர்தல் நேரத்தில் மஞ்சுவிரட்டு, கோயில் திருவிழா முக்கியமா? என்று கேட்டார். அதைத்தொடர்ந்து அவர் சிறிது நேரமே பேசினார்.
பிறகு தேவகோட்டையைச் சேர்ந்த முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுசாமிக்கு காரைக்குடி தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கோரி அவருடைய ஆதரவாளர்கள் ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் ப.சிதம்பரத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வேலுச்சாமி கூறியதாவது: நான் தேவகோட்டை பகுதியில் நகராட்சித் தலைவராக இருந்துள்ளேன். ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல் ஏராளமான பணிகளை செய்துள்ளேன். அதனால் எனக்கு ப.சிதம்பரமும், கே.ஆர்.ராமசாமியும் சீட் பெற்று தருவார்கள் என நம்புகிறேன், என்று கூறினார்.