

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் நேற்று பார்வையிட்டு, சேத விவரங்களை ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் ஒரு குழு வந்துள்ளது. இந்த குழுவினர் கடந்த 2 நாட்களாக காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்தனர். 3-வது நாளான நேற்று வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத் தின் சில பகுதிகளில் வெள்ள சேதங்களை பார்வையிட்டனர்.
முதலில் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்றனர். அங்கு தங்கியிருந்தவர் களிடம் வெள்ள பாதிப்புகள், அரசு சார்பில் வழங்கப் படும் உதவிகள் குறித்து கேட்டறிந் தனர். பின்னர் மழை சேதங்கள், மாநகராட்சி நடவடிக்கைகள் தொடர்பாக வைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர். அருகில் இருந்த அம்மா உணவகத்துக்குச் சென்று கனமழையின்போது உணவு சமைத்து வழங்கியது தொடர்பாக ஊழியர்களிடம் விசாரித்தனர்.
அங்கிருந்து திருவொற்றியூர் கார்கில் நகருக்குச் சென்றனர். அங்கு மழைநீர் இன்னும் வடி யாமல் இருப்பதை பார்த்தனர். அங்கு செயல்பட்டு வந்த மருத்துவ முகாமை பார்வையிட்டு, சிகிச்சை முறைகள் குறித்தும் நோய்த் தொற்று ஏற்பட்டதா எனவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அப்பகுதி மக்களுக்கு எத்த கைய குடிநீர் வழங்கப்படுகிறது என்று கேட்ட குழுவினரிடம், ‘மீஞ்சூர் பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுகிறது. அங்கு தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. அதை இங்கு வழங்குகிறோம்’ என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட எல்லையான சடையன்குப்பத்தில், புழல் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் வரும் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆறு ஆகியவை சங்கமிக்கும் பகுதியை பார்வையிட்டனர். அப்பகுதியில் எதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் விளக்கினர்.
மக்கள் வேதனை
சாத்தாங்காடு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டிருந்த மக்களையும் மத்திய குழுவினர் சந்தித்தனர். “நிவாரண முகாம்களில் உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. மழை வெள்ளத் தால் எங்கள் உடமைகள் அனைத் தையும் இழந்து விட்டோம்” என்று குழுவினரிடம் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பொன்னேரி தாலுகா தத்த மஞ்சில் பகுதிக்கு சென்ற மத்திய குழுவினரிடம், மழை வெள்ளத் தில் மூழ்கி அழுகிய பயிர்கள், நிலத்தில் சாய்ந்து முளைத்துவிட்ட நெல்மணிகளை விவசாயிகள் காட்டினர். பூந்தமல்லி, புதுச்சத் திரம் பகுதியில் சேதமடைந்த சாலைகளையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
தூத்துக்குடியில் வெள்ள சேதங்களை பார்வையிடும் திட்டம் உள்ளதா என்று மத்திய குழுவின் தலைவர் டி.வி.எஸ்.என்.பிரசாத் திடம் நிருபர்கள் கேட்டபோது, ‘‘தமிழக அரசு கேட்டுக்கொண்ட இடங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு முடித்திருக்கிறோம். மழை வெள்ளத்தால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது’’ என்றார்.
தமிழகத்தில் ஆய்வை முடித்து விட்ட மத்திய குழுவினர், புதுச்சேரி சென்றுள்ளனர். அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அதன்பிறகு டெல்லி திரும்பும் குழுவினர், இந்த வாரத்துக்குள் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்கின்றனர்.