

‘‘மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு 6 இலவச சிலிண்டர்களே போதும். இப்படிச் சொல்வதால் என்னைப் பற்றி அதிகப்பட்சம் மீம்ஸ் போடுவார்கள், அதைப் பற்றி எனக்கு கவலையில்லை’’ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அங்கு தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
அதில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் திட்டமும், இல்லத்தரசிகளுக்கு 1500 ரூபாய் திட்டமும் போதும்.
இது தவிர, கூட்டுறவு வங்கி நகைக் கடன், மகளிர் சுய உதவிக்க் குழு கடன் தள்ளுபடியையும் முதல்வர் அறிவித்து உள்ளார். இப்படிச் சொல்வதால் என்னைப்பற்றி பல மீம்ஸ்கள் எல்லாம் போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது மட்டும் உறுதி’’ என்றார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுக அறிவித்துள்ள திட்டங்கள் எதையும் நிறைவேற்றியதாக வரலாறு கிடையாது. அதுபோல் இந்த முறையும் நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்துள்ளனர். ஜெயலலிதாவின் மறைவுக்குக் காரணமே திமுக கொடுத்து நெருக்கடிதான். பொய்யான வழக்கை உண்மையான வழக்காக மாற்றி மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்குக் காரணம் மன அழுத்தம் தான். தேர்தலுக்காக பெண்களின் வாக்கு வங்கியை பெறும் நோக்கில் இந்த மாதிரி பொய்யான நாடகத்தை தேர்தல்அறிக்கை வழியாக தெரிவித்துள்ளார்கள், " என்றார்.