Published : 13 Mar 2021 06:09 PM
Last Updated : 13 Mar 2021 06:09 PM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கட்சி விதியால் பாலபாரதிக்கு வாய்ப்பில்லை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பலரது பெயர் இருந்தும், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாலபாரதிக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், கட்சி விதியில் உறுதியாக நின்று அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

திமுக கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தையில் 12 தொகுதிகள் கேட்ட நிலையில், நீண்ட இழுபறிக்குப்பின் கடைசியாக 6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டனர். விரும்பிய தொகுதிகள் கிடைக்காததால் முதன்முறையாக சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடவில்லை. சென்னை அல்லாத 6 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 1. திருப்பரங்குன்றம், 2.கந்தர்வக்கோட்டை (தனி), 3. திண்டுக்கல், 4.கோவில்பட்டி, 5. அரூர் (தனி), 6. கீழ்வேளூர் (தனி) ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து அந்தந்த மாவட்டக் குழுக்கள் முடிவு அடிப்படையில் மாநிலக் குழுவில் வைத்து விவாதிக்கப்படுகிறது.

இதில் பலரும் பரிசீலிக்கப்பட்டப்பின் இறுதிப் பட்டியலை இன்று முடிவு செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியலை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

1. திருப்பரங்குன்றம் - எஸ்.கே.பொன்னுத்தாய், மாநிலக்குழு உறுப்பினர்

2. கந்தர்வக்கோட்டை தனி - எம்.சின்னதுரை, மாநிலக்குழு உறுப்பினர்

3. திண்டுக்கல் - என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர்

4. கோவில்பட்டி - கே.சீனிவாசன், தூத்துக்குடி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்

5. அரூர் தனி - குமார், மாநிலக்குழு உறுப்பினர்

6. கீழ்வேளூர் தனி - நாகை மாலி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

இவ்வாறு அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும். கனகராஜ், பாலபாரதி, டில்லிபாபு, மதுக்கூர் ராமலிங்கம் போன்ற பிரபலங்கள் போட்டியில் இருந்தனர். ஆனாலும், பெரும்பான்மை முடிவு அடிப்படையில் புதிய வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x