

திருப்பரங்குன்றம், உசிலம்பட்டியில் அமமுக சார்பில் பலமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக கலக்கம் அடைந்துள்ளன.
மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி தொகுதிகள் முக்கியமானவை. இதில், திருப்பரங்குன்றத்தில் அதிமுக அதிக முறை வெற்றிபெற்று இந்தத் தொகுதி அவர்கள் கோட்டையாக இருந்து வந்தது. ஆனால், கடைசியாக நடந்த இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் வெற்றிபெற்றார்.
ஆளும்கட்சியாக இருந்தும் சட்டப்பேரவை பொதுத்தேர்தல், அதன்பிறகு ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற இந்தத் தொகுதியை அதிமுகவினரால் தக்கவைக்க முடியவில்லை.
தற்போது இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார். இது இவரது சொந்தத் தொகுதி என்பதால் கடந்தமுறை வெற்றிபெற்ற மதுரை வடக்கு தொகுதியிலிருந்து இந்தத் தொகுதிக்கு மாறியுள்ளார். திமுக சார்பில் இன்னும் இந்தத் தொகுதியில் தளபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரை திருப்பரங்குன்றம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கெனவே அமமுக சார்பில் கடந்த மக்களவைத்தேர்தலில் போட்டியிட்டு 85,747 வாக்குகள் பெற்றவர். அண்ணாத்துரையின் தந்தை காளிமுத்து ஏற்கணவே இதே தொகுதியில் 1977, 1980ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
டேவிட் அண்ணாதுரையின் சொந்த தொகுதியும் இதே தொகுதிதான். இவர் போட்டியிடுவதால் இவர் அதிமுக வாக்கு வங்கியை சிதைப்பார் என அக்கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர். மேலும், அண்ணாத்துரையின் தந்தை காளிமுத்துவை தொகுதி முழுவதும் மக்கள் அறிவர். தந்தையின் செல்வாக்கு, தன்னுடைய அரசியல் பணிகளால் இந்தத் தொகுதியில் வெற்றிபெறலாம் என அவர் எதிர்பார்க்கிறார்.
ஏற்கெனவே ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டேவிட் அண்ணாத்துரை அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தார். ஆனால், திடீரென்று ஏ.கே.போஸ் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால், ஏமாற்றமடைந்த டேவிட் அண்ணாதுரை டிடிவி.தினகரனிடம் விரும்பி அந்தத் தொகுதியை கேட்டுப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
ராஜன் செல்லப்பா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்ததொகுதியை குறிவைத்து தேர்தல் பணிகளை செய்து வருகிறார். அவர் ஒவ்வொரு வார்டு, பூத் வாரியாக நிர்வாகிகளை நியமித்து தேர்தல்பணிகளை செய்துள்ளார்.
திமுக சார்பில் தளபதி போட்டியிடுகிறார். மேலும், கமல், சீமான் கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுவதால் இந்தத் தொகுதியில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல், உசிலம்பட்டி தொகுதிக்கு அமமுக வேட்பாளராக அக்கட்சி மாவட்டச் செயலாளர் மகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணி வேட்பாளராக பார்வர்டு பிளாக் பி.வி.கதிரவனும், அதிமுகவில் அய்யப்பனும் போட்டியிடுகிறார்கள். மகேந்திரன், 2006ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு திமுக கூட்டணி வேட்பாளர் கதிரவனை வென்றார். அதுபோல், பி.வி.கதிரவன், 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் சோ.ராமசாமியை வென்றது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்தத் தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கிறது.