Published : 13 Mar 2021 06:15 PM
Last Updated : 13 Mar 2021 06:15 PM

மாவட்டச் செயலாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் போட்டி; நீலகிரியில் முக்கியத்துவம் பெற்றுள்ள குன்னூர் தொகுதி

நீலகிரி மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் போட்டியால் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. உதகை சட்டப்பேரவைத் தொகுதியை இரு திராவிடக் கட்சிகளும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளதால், உதகையில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. இந்தத் தொகுதிக்கான வேட்பாளர்களை இரு கட்சிகளும் அறிவிக்காததால், வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியும் பிரச்சாரம் மந்தகதியில் உள்ளது.

இந்நிலையில், குன்னூர் தொகுதியில் அதிமுக, திமுக மற்றும் அமமுக நேரடியாக களம் காணுவதால், பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

அதிமுகவில் மாவட்டச் செயலாளர் கப்பச்சி டி.வினோத்தும், அமமுக சார்பில் அதன் மாவட்டச் செலயாளர் எஸ்.கலைச்செல்வனும் போட்டியிடுகின்றனர். திமுகவில் மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் மற்றும் வேட்பாளர் க.ராமசந்திரன் ஆகியோரின் சொந்தத் தொகுதி இது.

இதனால் மூன்று கட்சிகளுக்கு இடையேயும் குன்னூர் தொகுதியில் கடுமையாகப் போட்டி ஏற்பட்டுள்ளது. வெற்றிக்கனியைப் பறிக்க அரசியல் கட்சியினர் கடுமையாக உழைக்கின்றனர்.

வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் கப்பச்சி டி.வினோத், திமுக வேட்பாளர் ராமசந்திரன் மற்றும் அமமுக வேட்பாளர் எஸ்.கலைச்செல்வன் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

அதிமுக வேட்பாளர் கப்பச்சி டி.வினோத் உதகையைச் சேர்ந்தவராக இருந்தாலும், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் என்பதால், அதிமுகவினர் வரவேற்பு அளித்து பிரச்சாரத்தைத் தொடங்கினர். அறிமுகக் கூட்டத்திலேயே குன்னூர் எம்எல்ஏ சாந்தி அ.ராமு மற்றும் விவசாயப் பிரிவு துணைத்தலைவர் பாரதியாரிடையே மோதல் ஏற்பட்டது தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்திய வினோத், தேர்தல் பணியாற்ற ஊக்கப்படுத்தினார்.

அமமுக சார்பில் குன்னூர் வேட்பாளர்கள் எஸ்.கலைச்செல்வன் மற்றும் உதகை வேட்பாளர் தேனாடு லட்சுமணன், கோத்தகிரி அருகேயுள்ள பேரகணியில் உள்ள படுகரின மக்களின் குல தெய்வமான ஹெத்தையம்மன் கோயிலில் காணிக்கை செலுத்தி பிரச்சாரத்தைத் தொடங்கினர்.

திமுக வேட்பாளர் ராமசந்திரனுக்கு குன்னூரில் வரவேற்பு அளித்து, அவரை மக்களுக்கு மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் அறிமுகம் செய்து வைத்தார்.

கோத்தகிரியில் திமுக வேட்பாளர் க.ராமசந்திரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த க.ராமசந்திரன் இம்முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதனால், கோத்தகிரியில் ராமசந்திரனுக்கு கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

இதனால், குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கட்சிகளின் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் மற்றும் திமுக வேட்பாளர் காசிலிங்கம் ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக கட்சியில் இருந்து வந்த நிலையில், அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் முதல் முறையாகக் களம் காணுவதால், இவர்களின் பிரச்சார வியூகங்கள் வரும் நாட்களில்தான் தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x