

மக்களவைத் தேர்தலில் தென்சென்னையில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் தனது இயற்பெயரை அளிக்காமல் வேட்புமனுத் தாக்கல் செய்ததால் அவருக்கு எதிராகத் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரையே வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும்.
ஆனால், வாக்காளர் பட்டியலில் சுமதி என்ற பெயரில் இடம்பெற்றிருந்த தென்சென்னை திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனது வேட்பு மனுவில், சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் எனக் குறிப்பிட்டுள்ளார், அவரது வேட்புமனுவைத் தேர்தல் அதிகாரி ஏற்றிருக்கக் கூடாது. அந்த மனுவில், திமுக எம்.பி.யின் பெயரை சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் என்பதை சுமதி என மாற்ற வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வெற்றியை எதிர்த்து தேர்தல் முடிந்த 45 நாட்களுக்குள் வழக்குத் தொடர வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.