

புதுக்கோட்டையில் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். அப்போது, இருவரும் தங்கள் கட்சி சின்னத்தைக் காட்டி மாறிமாறி வாக்கு சேகரித்தனர்.
புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மூர்த்தி கையில் டார்ச் லைட்டுடன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை தெற்கு 3-ம் வீதியில் வாக்கு சேகரித்தபோது, அங்கு வந்த திமுக வேட்பாளர் வி.முத்துராஜாவும் இவரும் எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது. இருவரும் செய்வதறியாது திகைத்த மறுகணமே இருவரும் ஒருவருக்கொருவர் துண்டு அணிவித்து, வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
மக்கள் நீதி மய்ய வேட்பாளர் தனது கையில் இருந்த டார்ச் லைட்டை உயர்த்திக் காட்டி அவரிடம் ஆதரவு கோரவே, அவரோ தனது கையை உயர்த்தி உதயசூரியனுக்கு ஆதரவு கோரினார்.
இது, அங்கிருந்த இரு வேறு அரசியில் கட்சியினருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிர்பாராத விதமாத சந்தித்து வாழ்த்து தெரிவித்துக்கொண்ட வேட்பாளர்கள் திமுக வி.முத்துராஜா, மக்கள் நீதி மய்யம் மூர்த்தி ஆகியோர்.