Last Updated : 13 Mar, 2021 05:14 PM

 

Published : 13 Mar 2021 05:14 PM
Last Updated : 13 Mar 2021 05:14 PM

காங்கிரஸ் கட்சியில் வாரிசுகளுக்கும், பண பலத்துக்குமே முக்கியத்துவம்; உழைப்பவர்களுக்கு சீட் இல்லை: ஜான்சிராணி பேட்டி

தமிழக காங்கிரஸ் கட்சியில் வாரிசுகளுக்கும், பண பலத்துக்குமே முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்று மாநில மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவி ஜான்சிராணி குற்றம் சாட்டியுள்ளார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதி, திமுக கூட்டணியில் மக்கள் விடுதலைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு இத்தொகுதி ஒதுக்கப்படும், முன்னாள் எம்எல்ஏ, பொன்னம்மாளின் பேத்தி மாநில மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவி ஜான்சி ராணி போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் மக்கள் விடுதலைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், தொகுதியைப் பெற்றுத் தராத மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியைக் கண்டித்து நிலக்கோட்டையில் காங்கிரஸார் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் 'இந்து தமிழ் திசை'க்கு ஜான்சி ராணி அளித்த நேர்காணலில் கூறியதாவது:

நிலக்கோட்டை தொகுதி மக்கள் விடுதலைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதற்கு நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு?

நிலக்கோட்டை தொகுதியைக் கூட்டணிக் கட்சிகளுக்குத்தான் திமுக ஒதுக்கியிருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களுக்குத் தர வேண்டும் என்று கேட்கவில்லை. இதற்கு மூல காரணம் பண பலம். பிற வேட்பாளர்கள் பணம் செலவழிப்பார்கள். என்னிடம் பண பலம் இல்லை. அதுதான் காரணமாக இருக்கக் கூடும். பணத்தின் அடிப்படையில்தான் எனக்கு நிலக்கோட்டை தொகுதி மறுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் அழகிரியின் மீதான உங்கள் விமர்சனம்?

நாடாளுமன்றத் தேர்தலில் வாரிசுகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கட்சியில் தொடர்ச்சியாகத் தொண்டர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் சீட் வழங்கப்படுவதில்லை. எத்தனையோ உழைக்கக் கூடிய மாநிலத் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

வாரிசுப் பின்னணி, பணபலம் கொண்டவர்களுக்காக மட்டுமே காங்கிரஸில் இந்த 25 தொகுதிகள் வாங்கப்பட்டுள்ளன. 25 தொகுதிகளை உழைக்கக் கூடிய வாரிசுகளுக்கு வழங்கட்டும். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நேற்று கட்சியில் இணைந்து இன்று எம்எல் ஏ சீட்டு கேட்பவர்களுக்குத் தொகுதிகளை ஒதுக்கக் கூடாது. உழைக்கும் மாவட்டத் தலைவர்களுக்கு ஒதுக்கட்டும்.

33% சதவீத ஒதுக்கீட்டை காங்கிரஸ்தான் முன்னெடுத்து வருகிறது. ஆனால், அது கட்சியில் இல்லை. காங்கிரஸில் சிறுபான்மையினர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். இவ்வாறு எல்லாவற்றிலும் அனைவரையும் கலந்து ஆலோசிக்காத முடிவுகள் கே.எஸ்.அழகிரியின் தலைமையின் கீழ் நடந்து வருகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் நீங்கள் வலியுறுத்துவது?

இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக ராகுல் காந்தி போராடிக் கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் காங்கிரஸுக்கு தற்போது மிகப் பெரிய எழுச்சி உள்ளது என்றால், ராகுல் காந்தியின் சுற்றுப் பயணம்தான் அதற்குக் காரணம். ராகுல் காந்தி தமிழகத்தில் மக்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் என்று பல வருடங்களாக நாங்கள் ஆர்வமாக இருந்தோம். இன்று அவர் அதனைச் செய்திருக்கிறார்.

இதன் விளைவாக, மக்களிடத்திலும், தொண்டர்களிடத்திலும், மாவட்ட நிர்வாகிகள் இடத்திலும் மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனை நாம் தவறவிடாமல் கட்சியில் உழைப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் 25 தொகுதிகளையும் காங்கிரஸ் வெற்றி பெற முடியும்.

குற்றச்சாட்டுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமை தொடர்புகொண்டதா?

இல்லை. நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிறகு காங்கிரஸ் தலைமையிலிருந்து இதுவரை பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. நான் காத்திருக்கிறேன்.

அடுத்த நகர்வு?

முதலில் எனது தொகுதி மக்களைச் சந்திக்க இருக்கிறேன். எனது பாட்டி முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள் நிலக்கோட்டை மக்களுக்கு நிறைய நலத்திட்டங்களைச் செய்திருக்கிறார். இன்றும் அவர் பெயர் அங்கு நிலைத்து இருக்கிறது என்றால் அதற்கு அவர் செய்த நலத்திட்டங்கள்தான் காரணம். அதன் தொடர்ச்சியாகத்தான் நான் நிலக்கோட்டை மக்களைப் பார்க்கிறேன். தொகுதி மக்களுடன் கலந்தாலோசித்த பிறகுதான் எனது முடிவை அறிவிப்பேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x