

ஆலங்குடி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மெய்யநாதன், தொகுதி மண்ணைத் தொட்டு வணங்கி, தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய சம்பவம் அங்கிருந்தோருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆலங்குடி, புதுக்கோட்டை, விராலிமலை, திருமயம் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக, திமுக நேரடிப் போட்டி உள்ளது. மற்ற தொகுதிகளான அறந்தாங்கியில் காங்கிரஸ்- அதிமுக, கந்தர்வக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- அதிமுகவுக்கு இடையே போட்டி உள்ளது.
இந்நிலையில், ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதனுக்கு அதே தொகுதியில்ல் மீண்டும் போட்டியிட திமுக சார்பில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் இருந்து இன்று (மார்ச் 13) மெய்யநாதன் புதுக்கோட்டைக்கு வந்தார். ஆலங்குடி தொகுதியின் எல்லையான கேப்பறை பகுதியில் ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டு, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கு வண்டியில் இருந்து இறங்கியவர் சாலையிலேயே மண்டியிட்டு மண்ணைத் தொட்டு வணங்கி, தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அங்கிருந்து, திறந்த வாகனத்தில் ஏறி தோப்புக்கொல்லை, திருவரங்குளம், வம்பன், ஆலங்குடி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மெய்யநாதன் வாக்கு சேகரித்தார்.
திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முதலாக ஆலங்குடி வந்த மெய்யநாதன், தொகுதி மண்ணைத் தொட்டு வணங்கிய சம்பவம் அங்கிருந்தோருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.