

காவல்துறையில் செயல்படுபவர்களின் கோரிக்கைகள் பெருமளவில் கேட்கப்பட்டு அவை குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் பணியாற்றினால் எஸ்.ஐ, சட்டம்- ஒழுங்கு பணியில் உயிர் நீத்தால் இழப்பீடு ரூ.1 கோடி எனப் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக காவல்துறையினருக்கு உள்ள பெரும் குறையே அவர்கள் குறைகளை எடுத்துச் சொல்ல ஒரு சங்கம் இல்லை, உயர் அதிகாரிகள் மனது வைத்து கேட்டால் மட்டுமே குறை தீரும். ஆனாலும் ஒட்டுமொத்தக் குறைகளை தீர்க்க எந்தவித அமைப்பும் இல்லை.
அரத பழசான பிரிட்டீஷ் கால அடிமை மனோபாவத்துடன் நடத்தப்படும் துறைகளில் முதன்மையான துறை காவல்துறைதான். அதிலும் அடிமட்டத்திலுள்ள கிரேட் 2, கிரேட் 1 வகை காவலர்கள் நிலை படுமோசம். விடுப்பு கிடைக்காத விரக்தியில், மன உளைச்சல் , சிறு குற்றங்களுக்குப் பெரிய தண்டனை என பாதிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்த சம்பவங்கள் பல மதிப்புமிகு உயிர்கள் பறிபோகக் காரணமாக அமைந்தது.
பொதுமக்களிடம் அதிகார தோரணை மிக்கவர்களாக வலம் வரும் போலீஸார் தங்கள் பிரச்சினைகளுக்காக அதிகாரிகளிடமும், அமைச்சுப் பணி அதிகாரிகளிடமும் கூனிக் குறுகி நிற்கும் நிலை இதுவரை பலரது மனக்குறையாக உள்ளது. அதிலும் பெண் காவலர்கள் நிலை மிக மோசம். தங்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை மேலிடத்தில் புகாராகக்கூட சொல்ல முடியாமல் வேலை பார்ப்போர் அதிகம்.
இவை ஒருபக்கம் தீர்க்க முடியாத பிரச்சினைகள், இதற்கு சங்கம் ஒன்றே தீர்வு என போலீஸ் தரப்பில் ஈனஸ்வரத்தில் எழும் குரலும் அடக்கப்படுகிறது. அடிப்படை உரிமைகள் கூட கிடைப்பதில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியும் உரிய காலத்தில் பதவி உயர்வு இல்லாத நிலை, சிறு முணுமுணுப்புக்கும் சார்ஜ் கொடுக்கப்பட்டு பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு பாதிப்பு.
பணியில் உயிரிழக்கும் போலீஸார் குடும்பத்திற்கு குறைந்த இழப்பீடு, முக்கியல் கோரிக்கையான வார விடுப்பு ஆகியவை குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் நல்ல அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காவலர் நலனுக்கான தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கங்கள்:
*அனைத்துக் காவலர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும்.
* சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியின்போது காவலர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன், இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்கப்படும். உயிர் நீத்தவர்கள் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் ஆறுதல் தொகை வழங்கப்படும்.
போலீஸ் கமிஷன்
* தமிழகத்தில் முதல் போலீஸ் கமிஷன் அமைத்து, பரிந்துரைகளைப் பெற்று, நடைமுறைப்படுத்திய பெருமை கருணாநிதி தலைமையிலான திமுக அரசையே சாரும். அதனை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மீண்டும் திமுக அரசு அமைந்ததும், போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு ஒரு கால வரையறைக்குள் அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
* காவலர் குறைகளைக் கேட்டறிந்து, பரிசீலித்து அவற்றைச் சரி செய்வதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் குறை தீர்க்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும்.
* காவலர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள துறை ரீதியான சிறு தண்டனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் உரிய காலத்தில் பதவி உயர்வுகள் பெறவும் வழி வகுக்கப்படும் .
* காவலர் பணியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படும். கருணை அடிப்படையிலான பணியிடங்கள் கால தாமதமின்றி வழங்கப்படும்.
* காவலர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப் படி, இடர்காலப் படி உள்ளிட்ட சலுகைகள் உயர்த்தி வழங்கப்படும்.
* இரண்டாம் நிலைக் காவலர்களாகப் பணியில் சேருபவர்களும் ஏழு ஆண்டுகள் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்தவர்களும், பத்து ஆண்டுகளில் தலைமைக் காவலராகவும், இருபது ஆண்டுகளில் எஸ்.எஸ்.ஐ எனப் பதவி உயர்வும் வழங்கப்படும்.
ஊர்க்காவல் படையினர் நலன்
* காவல் துறையினருக்குப் பல வகையிலும் உறுதுணையாக நிற்கும் ஊர்க்காவல் படையினரின் நலன் காக்கும் நோக்கில் அவர்களின் பணி நாட்கள் உயர்த்தப்படும். ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்படும்.
இவ்வாறு காவல்துறையினருக்கான அறிவிப்புகளாக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.