

திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும், மருத்துவக் கல்லூரி இடங்களை மாநிலத் தொகுப்புக்கே கொண்டுவர நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுக அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் வெளியிட்டார். திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில்,
’’ * திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றிக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
* தமிழக மாணவ இளைஞர்கள், மாணவர்கள், மருத்துவக் கல்வி கற்பதற்கென்று தமிழக மக்களின் வரிப்பணத்தில் மாவட்டம் தோறும் புதிது புதிதாக தமிழக மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் பட்டப்படிப்பில் 15 சதவிகித இடங்களையும், பட்ட மேற்படிப்பில் 50 சதவிகித இடங்களையும், சிறப்பு மேற்படிப்பில் 100 சதவீத இடங்களையும் மத்தியத் தொகுப்புக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம் தமிழக மாணவர்களுக்குப் பேரிழப்பு ஏற்படுவதுடன், தமிழக அரசின் நோக்கங்களுக்கும், அது கடைப்பிடித்து வரும் சமூக நீதிக் கொள்கைக்கும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது மத்திய அரசு புதிதாக 500 மருத்துவக் கல்லூரிகளை அமைத்து 50,000 மருத்துவக் கல்வி இடங்களை உருவாக்கியுள்ளதால், மாநில அரசு நடத்தி வரும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களையும் மாநிலத் தொகுப்புக்கே கொண்டுவர அமையவிருக்கும் திமுக அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’’ என்று தெரிவிக்கப்பட்டுளது.
'ஒரே நாடு, ஒரே தகுதி' என்ற அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தக் 2016-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இதற்குத் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. எனினும் மத்திய அரசு நுழைவுத் தேர்வை அமல்படுத்தியது.
அனிதா உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டனர். இதற்கிடையே கிராமப்புறங்களில் படிக்கும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி தடைபடாமல் இருக்க மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் பழனிசாமி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.