

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு வழங்கும் நிவாரண உதவித்தொகைக்கு தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்க கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநிலச் சங்கத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் இயக்க நிறுவனர் செல்வராஜன், மாநிலப் பொதுச் செயலாளர் ஆறுமுகம், மாநிலப் பொருளாளர் மனோகரன், தஞ்சை மாவட்டத் தலைவர் முருகேசன், திருவாரூர் மாவட்டத் தலைவர் சடையப்பன், நாகை மாவட்டச் செயலாளர் அருணகிரி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் அண்மையில் பெய்த கடும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் உடைமைகள், வீடுகளை இழந்து தவிக்கும் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் நிவாரண உதவித்தொகைக்காக வருவாய்த் துறையில் பணியாற்றி வரும் 15 ஆயிரம் கிராம உதவியாளர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.