

கருணாநிதியைப் போல் சசிகலா திறமை படைத்தவர் இல்லை என்றும், அதனால் அதிமுகவை அவரால் வழிநடத்தி இருக்க முடியாது என்றும் துக்ளக் வார இதழின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று இரவு கலந்துகொண்ட அவர் பேசும்போது, ''70 முதல் 80 சதவீத அதிமுக உறுப்பினர்கள் எப்போதுமே சசிகலாவை ஏற்றுக் கொள்ளவில்லை. பெரிய அளவில் ஆதரவு இல்லாமல் கட்சியை அவரால் கைப்பற்ற முடிந்திருக்காது. சசிகலா ஒன்றும் கருணாநிதியைப் போன்ற திறமை படைத்தவர் இல்லை.
குறைவான திறமை, குறைவான வாய்ப்புகளைக் கொண்டிருந்த சசிகலாவுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. அதனால் கட்சியை அவரால் வழிநடத்தி இருக்க முடியாது. தற்போது தமிழகத்தில் சசிகலாவின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிட்டது.
தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ரஜினி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு அதற்கான அடித்தளமும் சரியாக அமைந்திருந்தது. ஆனால், கெடு வாய்ப்பாக அவரால் வரமுடியாமல் போய்விட்டது.
அரசியல் இருந்து விலகியதால் ரஜினி ஒருபுறம் நிம்மதி அடைந்துள்ளார். அதே நேரத்தில் மக்கள் பணியாற்ற முடியவில்லையே என்று மற்றொரு புறம் வருத்தமாகவும் இருக்கிறார்’’ என்று குருமூர்த்தி தெரிவித்தார்.