

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயரும் நிலையில், இல்லத்தரசிகளைக் கவரும் வகையில் காஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுக மெகா கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் வெளியிட்ட நிலையில், திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. இதில், ஜூன் 3 ஆம் தேதி முதல் ஒவ்வொரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி சிலிண்டர் விலை மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் அதனை நிர்ணயிக்கின்றன. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்துக்கு இருமுறை நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில், விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதற்கிடையே நாடு முழுவதும் வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு நுகர்வோரிடம் இருந்து சிலிண்டருக்கான முழுக் கட்டணத்தையும் வசூலித்து விட்டு, பின்னர் அதற்கான மானியத்தை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தி வந்தது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மானியத் தொகை ரூ.200 வரை வழங்கப்பட்டது. 2 ஆண்டுளுக்கு முன்பு வரை ரூ.100 மானியமாக வழங்கப்பட்டது. தற்போது இத்தொகை படிப்படியாகக் குறைக்கப்பட்டு கடந்த மே மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலையும் உயர்ந்து, மானியமும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில், இல்லத்தரசிகளைக் கவரும் விதமாக ஒவ்வொரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.