Published : 13 Mar 2021 01:32 PM
Last Updated : 13 Mar 2021 01:32 PM

பேறுகால உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக அதிகரிக்கப்படும்; பேறுகால விடுப்பு ஒரு ஆண்டாக உயர்த்தப்படும்: பெண்களை மையப்படுத்தி திமுக தேர்தல் அறிக்கை

பேறுகால உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக அதிகரிக்கப்படும், பேறுகால விடுப்பு ஒரு ஆண்டாக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6 அன்று நடைபெற உள்ளது. இதற்காக, அதிமுக, திமுக ஆகிய இரு முதன்மைக் கட்சிகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை நேற்று முன்தினம் இரவு முடித்த திமுக, அக்கட்சி போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று (மார்ச் 12) வெளியிட்டது.

இந்நிலையில், இன்று (மார்ச் 13) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முன்னதாக, தேர்தல் அறிக்கையைத் தயாரித்த அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதன் வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

திமுக வேட்பாளர்கள் பட்டியல் இந்தத் தேர்தலின் முதல் கதாநாயகன் எனவும், தேர்தல் அறிக்கை இரண்டாவது கதாநாயகன் எனவும் தெரிவித்தார். மேலும், இந்த தேர்தல் அறிக்கை தலைமுறைகள் கடந்தும் பேசப்படும் என்ற அவர், இதில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, முக்கியமான வாக்குறுதிகளை அவர் வரிசையாக வாசித்தார். அதன்படி, மகளிருக்கு பேறுகால உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகால மற்றும் பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ.12 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை ரூ.24 ஆயிரமாக வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசுப் பணியில் உள்ள மகளிருக்குப் பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும் எனவும் ஸ்டாலின் அறிவித்தார். தற்போது, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x