

சென்னை கொளத்தூர் தொகுதியில் 7 இடங்களில் மழை வெள்ள நிவாரண மருத்துவ முகாம்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கன மழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. மழை நீருடன் கழிவு நீரும் கலப்பதால் தொற்று நோய்கள் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் வெள்ளப் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
பெரவள்ளூர் சாலையில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை அவர் பார்வையிட்டார். கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 7 மழை, வெள்ள நிவாரண மருத்துவ முகாம்களை அவர் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
கன மழையால் எப்போதும் இல்லாத அளவுக்கு சென்னை மாநகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் பாதிப்புகளை பெருமளவில் தடுத்திருக்க முடியும். மழை நீர் வெளியேறுவதற்கான வழிகள் இல்லாததால் எங்கும் வெள்ளக்காடாக உள்ளது. மழை வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டதாக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அமைச்சர்கள் ரூ. 2 ஆயிரத்து 500 கோடிக்கான திட்டங்களை அறிவித்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனவேதான் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டிருந்தேன். ஆனால், அரசிடமிருந்து பதில் வரவில்லை.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.