Last Updated : 13 Mar, 2021 01:18 PM

 

Published : 13 Mar 2021 01:18 PM
Last Updated : 13 Mar 2021 01:18 PM

கோவை தெற்கில் தேசியக் கட்சிகளுடன் மோதும் கமல்ஹாசன்; மற்ற மாநிலத்தவர், சிறுபான்மையினர் வாக்குகள் சாதகம்?

கோவை தெற்கு தொகுதியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதியில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் பிற மாநில மக்கள் வாக்குகளும் அவருக்குக் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி இரண்டு திராவிடக் கட்சிகளும் அந்தத் தொகுதியைத் தங்கள் கூட்டணியில் தேசியக் கட்சிகளுக்கு ஒதுக்கி இருப்பதால் எளிதாக வெற்றி பெறலாம் என மக்கள் நீதி மய்யம் கருதுகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று ஏற்கெனவே கூறியிருந்தார். அவரே கட்சியின் முதல்வர் வேட்பாளர் என மக்கள் நீதி மய்யமும் அறிவித்துள்ளது. இதனால் கமல்ஹாசன் மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடக் கூடும் எனத் தகவல் வெளியானது.

இதற்குக் காரணமும் உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதிக்குட்பட்ட மயிலாப்பூர் , தி.நகர் தொகுதிகளில் கணிசமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றிருந்தது. இதுபோலவே ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றது.

அதுபோலவே கோவை மக்களவைத் தொகுதியிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றிருந்தது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுவதற்கான தொகுதியை முடிவு செய்ய கட்சித் தொண்டர்களிடம் கருத்துக் கேட்பு நடைபெற்றது. அதுமட்டுமின்றி அவருக்காக தொகுதியில் வெற்றி வாய்ப்பு தொடர்பாக இரண்டு சர்வேக்களும் எடுக்கப்பட்டன.

இந்தப் பின்னணியில் ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதியில் கமல் தேர்வு செய்ய ஆய்வு செய்யப்பட்டு இறுதியாக கோவை தெற்கு தொகுதி உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதியைத் தேர்வு செய்ததன் பின்னணியில் சில காரணங்களும் உள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கோவை மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சேர்த்து மொத்தமாக 1,45,082 வாக்குகளைப் பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 64,453 வாக்குகளையும், பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் 46,368 வாக்குகளையும் பெற்றனர். அதேசமயம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் 23,838 வாக்குகளைப் பெற்றார். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கணக்கிட்டு சதவீத அடிப்படையில் பார்ததால் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.

இந்தத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்துக்கு வலுவான வாக்கு வங்கி இருப்பதாலும், சிறுபான்மையினர் மற்றும் பல்வேறு மொழி பேசும் மக்கள் வசிக்கும் தொகுதி என்பதாலும் கோவை தெற்கு தொகுதி கமல்ஹாசனுக்குச் சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. சிறிய தொகுதியாக இருப்பதால் பிரச்சாரம் செய்வதும், மக்களைச் சென்றடைவதும் மிகவும் எளிதாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

தேசியக் கட்சிகளுடன் போட்டி

கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. இதன் மூலம், கமல்ஹாசனை எதிர்த்து தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் நேரடியாகப் போட்டியிடுகின்றனர். பாஜக சார்பில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வேட்பாளராகப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி இரண்டு திராவிடக் கட்சிகளும் அந்தத் தொகுதியை தங்கள் கூட்டணியில் தேசியக் கட்சிகளுக்கு ஒதுக்கி இருப்பதால் எளிதாக வெற்றி பெறலாம் என மக்கள் நீதி மய்யம் கருதுகிறது. மற்ற மாநில மக்கள் கணிசமாக வசிப்பதால் அவர்களுக்கு திராவிடக் கட்சிகளை விடவும் தேசியக் கட்சிகள் தெரிந்தவை என்பதால் அந்தக் கட்சிகள் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றன. எனவே அது தனக்கு பலமாக இருக்கும் என கமல்ஹாசன் கருதுகிறார்.

வானதி சீனிவாசன்

தேர்தல் வரலாறு

கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் நடந்த முதல் தேர்தலில், அதிமுக வேட்பாளர் சேலஞ்சர் துரை என்ற துரைசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி தோல்வியைத் தழுவினார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில், மாநகராட்சி கவுன்சிலராகவும், பணிகள் குழுவின் தலைவராகவும் இருந்த அம்மன் கே.அர்ச்சுணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் 59,788 வாக்குகளைப் பெற்றார்.

அதன் பின்னர், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளராக அம்மன் கே.அர்ச்சுணன் உயர்ந்தார். இவரை எதிர்த்து காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் போட்டியிட்டு 42,369 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பாஜக தனித்துப் போட்டியிட்ட நிலையில் இந்தத் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் களம் கண்ட வானதி சீனவாசன் 33,113 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,22,691

பெண்

1,22,510

மூன்றாம் பாலினத்தவர்

6

மொத்த வாக்காளர்கள்

2,45,207

கோவை தொகுதி எப்படி?

கோவை மாநகராட்சியின் 22, 25, 50, 51, 52, 54, 67, 68, 69, 70, 71, 72, 73, 80, 81, 82, 83, 84, 85 ஆகிய வார்டுகள் இத்தொகுதியில் உள்ளன. ராஜவீதி, பெரியகடைவீதி, ஒப்பணக்கார வீதி, உக்கடம், ரயில் நிலையம் சாலை, ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், காந்திபுரம் குறுக்கு வீதிகள், விரிவாக்கப் பகுதிகள், சுங்கம், ரெட் பீல்ட்ஸ், அரசினர் விருந்தினர் மாளிகை சாலை, உப்பிலிபாளையம், நேரு மைதானம், பாலசுந்தரம் சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகள் கோவை தெற்கு தொகுதியில் உள்ளன.

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில், தண்டுமாரியம்மன் கோயில், உக்கடம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோயில், பழமை வாய்ந்த சிவன் ஆலயமான கோட்டை ஈஸ்வரன் கோயில் ஆகியவை இந்தத் தொகுதியில் அமைந்துள்ளன.

தவிர, கோவை மாநகராட்சியின் அடையாளமாகக் கருதப்படும் 1892-ம் ஆண்டு கட்டப்பட்ட மாநகராட்சி மன்றக் கூட்டம் நடக்கும் ‘விக்டோரியா அரங்கம்’ மற்றும் ‘நகர் மண்டபம்’ கட்டிடம் இந்தத் தொகுதியில் அமைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x