Published : 13 Mar 2021 01:12 PM
Last Updated : 13 Mar 2021 01:12 PM

திமுக தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள்; தலைமுறைகள் தாண்டியும் பேசப்படும்: ஸ்டாலின்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.

சென்னை

திமுக தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6 அன்று நடைபெற உள்ளது. இதற்காக, அதிமுக, திமுக ஆகிய இரு முதன்மைக் கட்சிகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை நேற்று முன்தினம் இரவு முடித்த திமுக, அக்கட்சி போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று (மார்ச் 12) வெளியிட்டது.

இந்நிலையில், இன்று (மார்ச் 13) திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

அப்போது, அவர் பேசுகையில், "திமுக வேட்பாளர்கள் பட்டியலை நேற்று நான் வெளியிட்டேன். திமுக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுவதில் பெருமையடைகிறேன். திமுக தேர்தல் அறிக்கையை தேர்தல் கதாநாயகன் எனச் சொல்வதுண்டு. ஆனால், வேட்பாளர் பட்டியலையே சிலர் கதாநாயகன் என்றுதான் சொல்கின்றனர். இன்று இரண்டாவது கதாநாயகனை வெளியிடுகிறேன்.

திமுக தோன்றியதிலிருந்து தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். 1952 தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. இருந்தாலும் அண்ணா அன்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதனை வாக்குறுதிகளாகத் தருவோருக்கு ஆதரவு என்று அறிவித்தார். இந்த அறிக்கைகள் தனிப்பட்ட கட்சியின் விருப்பமாக அல்லாமல், தமிழக மக்களின் விருப்பமாகவும் இருக்கிறது.

திமுக போட்டியிட்ட முதல் தேர்தலின்போது, நெடுஞ்செழியன் தலைமையிலான குழு, பயணம் செய்து பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதேபோல், டி.ஆர்.பாலு தலைமையில் இம்முறை குழு அமைக்கப்பட்டு, அக்குழு தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் அறிக்கையைத் தயாரித்தது. அக்குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி. அவர்கள் மாபெரும் வரலாற்றுக் கடமையைச் செய்திருக்கின்றனர். பல்வேறு தலைமுறைகள் தாண்டியும் இவை பேசப்படும். தமிழ்நாட்டின் நிகழ்காலம், எதிர்காலத்தை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகள், வாக்குறுதிகளாக இருக்கின்றன" எனப் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x