

தேர்தல் மன்னன் பத்மராஜன் 216-வது முறையாக எடப்பாடி தொகுதியில் நேற்று சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். தேர்தலில் தான் தோற்றால் மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் கே.பத்மராஜன். தொடக்கத்தில் பஞ்சர் கடை நடத்திய இவர், பின்னர் சிறிய டயர் தொழிற்சாலைக்கு உரிமையாளர் ஆனார். பத்மராஜன் கடந்த 1988-ம் ஆண்டு முதல் இந்திய நாட்டில் நடக்கும் பல்வேறு தேர்தல்களில் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார். குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் உள்ளாட்சி முதல் நகராட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் தேர்தல் வரைப் பல்வேறு தேர்தல்களில் பல முறை போட்டியிட்டுள்ளார். ஆனால், எதிலும் அவர் வெற்றி பெற்றதில்லை. தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.
மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர்த்துப் போட்டியிட்டுள்ளார். அதிக முறை தொடர்ந்து போட்டியிட்டு லிம்கா, கின்னஸ் போன்ற சாதனைப் புத்தகங்களில் சாதனையாளராக இடம் பெற்றிருக்கிறார். இதனால் தேர்தல் மன்னன் பத்மராஜன் எனவும் அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் பத்மராஜன் 215-வது முறையாக மேட்டூர் தொகுதியில் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 216-வது முறையாக போட்டியிட மனுவைத் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தேர்தலில் நான் தோற்றால் மகிழ்ச்சி. தொடர்ந்து போட்டியிட்டு அதையே சாதனையாக மாற்றியுள்ளேன். விரைவில் கேரள முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்துப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளேன்'' என்று பத்மராஜன் தெரிவித்தார்.
நாட்டில் நடக்கும் பல்வேறு தேர்தல்களில் அவர் போட்டியிட்டுள்ள சூழலில், இதுவரை எங்குமே அவர் வெற்றி பெற்றதில்லை. கடந்த 2011 தமிழகத்தின் மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு 6,273 வாக்குகள் வாங்கியதுதான் இதுவரை அவர் வாங்கிய வாக்குகளில் அதிகமாகும்.