Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

மக்கள்தான் நாட்டின் தலைவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்; உண்மையான ஜனநாயகம் என்பது இதுதான் என ஆளுநர் பன்வாரிலால் கருத்து

பொதுமக்கள்தான் நாட்டின் தலைவர்கள் என்று அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்வதே உண்மையான ஜனநாயகமாகும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் பெற்று 75ஆண்டுகள் நிறைவடைய உள்ளதை குறிக்கும் வகையில் நாடுமுழுவதும் 75 இடங்களில் ‘அம்ரித்மஹோத்சவ்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான விழா நடைபெறும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டுஅறிவித்தார். அதன்படி, ‘அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்ச்சியின் தொடக்கவிழா சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:

இந்தியா பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து, உலக நாடுகளின் முன்பாக பெருமையாக முன்னோக்கி வருகிறது. அரசியல், பொருளாதாரத்தின் ஸ்திரத் தன்மை, கலாச்சாரம், சமூக நலன்ஆகியவற்றின் வழியாக இந்தியாஉலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது.

நாடுமுழுவதும் இன்று (மார்ச் 12) தொடங்கி 75 வாரங்களுக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சி வழியாக நமது கலாச்சாரம், பாரம்பரியம், சுதந்திரப் போராட்டம், சுதந்திர வீரர்களின் தியாகங்கள், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நாம் செய்த சாதனைகளை பரவச் செய்ய முடியும்.

உப்புக்கு வரி விதித்த பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி, 1930-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி குஜராத்தில் இருந்து தண்டி வரை உப்பு சத்தியாக்கிரகம் எனும் அகிம்சைவழி போராட்டம் நடத்தி, உப்புக்கான வரியை விலக்கச் செய்தார். வன்முறையற்ற இந்தப் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

தமிழகம் முக்கிய பங்கு

இதன்மூலம் ஈர்க்கப்பட்ட ராஜாஜி, திருச்சி முதல் வேதாரண்யம் வரை உப்பு சத்தியாக்கிரக அணிவகுப்பை மேற்கொண்டார். நாட்டின் புகழ்பெற்ற சுதந்திர இயக்கத்தில் தமிழகம் பெரும் பங்கைக் கொண்டுள்ளது.

சுப்பிரமணிய பாரதி, திருப்பூர்குமரன், வாஞ்சிநாதன், வேலுநாச்சியார், வ.உ.சி., பூலித்தேவன் எனஎண்ணற்ற சுதந்திரப் போராட்டவீரர்களை தமிழகம் கொண்டுள்ளது. காந்தியின் மனதுக்கு தமிழகம் நெருக்கமாக இருந்தது. காந்தி மதுரைக்கு வந்த பின்னர்தான் மிக சாதாரண உடைகளை அணியத் தொடங்கினார். பொதுமக்கள்தான் நாட்டின் தலைவர்கள் என்பதைப் புரிந்து கொள்வதே உண்மையான ஜனநாயகமாகும். காந்தி கூறிய இந்த பொன்மொழிகளை அனைத்துதரப்பு மக்களும் புரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை செயலர் விக்ரம் கபூர், ஆளுநரின் செயலர் ஆனந்த்ராவ் வி.பாட்டீல், செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், இயக்குநர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x