Last Updated : 13 Mar, 2021 03:12 AM

Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

நெல்லைக்கு குறிவைக்கிறார் குஷ்பு; நயினார் நாகேந்திரன் அவசரமாக வேட்புமனு தாக்கல்: அதிமுக, பாஜக கட்சிகள் கடும் அதிர்ச்சி

பாஜக வேட்பாளர் பட்டியல்வெளியாகாத நிலையில், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் நேற்று அவசரமாக வேட்புமனு தாக்கல் செய்தார். இத்தொகுதி குஷ்புவுக்கு வழங்கப்படலாம் என்பது தெரியவந்ததே இதற்கு காரணம்.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. தொகுதி ஒதுக்கீடுக்கு, சில மாதங்களுக்கு முன்னரே இத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் நயினார் நாகேந்திரன்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், இத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான இவர், தற்போது பாஜக மாநில துணைத் தலைவராக உள்ளார். சுவர் விளம்பரங்கள், தேர்தல் காரியாலயம் திறப்பு, வாகன பேரணி, மாநிலத் தலைவர் முருகன், நடிகை குஷ்பு ஆகியோரை அழைத்து வந்து பிரச்சாரம் என, நயினார் நாகேந்திரன் இங்கு 2 மாதங்களாக தீவிர பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

அதிமுகவினரிடம் இவை அதிர்ச்சியை ஏற்படுத்தின. இவருக்காகவே, திருநெல்வேலி தொகுதியை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கியது. அதிமுக மாவட்டச் செயலாளர் கணேசராஜாவை திருப்திபடுத்த அவருக்கு நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்பட்டது.

இப்போது மற்றுமொரு அதிர்ச்சியாக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகாத நிலையில், நயினார்நாகேந்திரன் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். அவருடன் பாஜக நிர்வாகிகள் யாரும் வரவில்லை. அவருடைய மகன் விஜய் மற்றும் பணியாளர்கள் சிலர் மட்டுமே வந்திருந்தனர். எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகிருஷ்ணமூர்த்தியுடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார் நயினார் நாகேந்திரன்.

அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

``நல்ல நாள் என்பதால் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டேன். பாஜக வேட்பாளராக அறிவிப்பு விரைவில் வந்துவிடும்” என்று மழுப்பலாக பதில் கூறினார்.

இது குறித்து கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் நடிகை குஷ்பு, சென்னை சேப்பாக்கம் தொகுதியில் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், அந்த வாய்ப்பு பறிபோனதால், திருநெல்வேலி தொகுதியைக் கேட்டு கட்சி மேலிடத்துக்கு குஷ்பு அழுத்தம் கொடுத்து வருகிறார். இத்தகவல் தெரியவந்ததுமே, அவசர அவசரமாக முதல் நாளிலேயே வேட்புமனுவை நயினார்நாகேந்திரன் தாக்கல் செய்தது தெரியவந்தது.

வேட்புமனு தாக்கலின்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், தங்கள் கட்சித் தலைமையின் கடிதத்தை, `பி’ படிவத்துடன் இணைத்து அளிப்பார்கள். அவ்வாறு அளித்தால்தான் அக்கட்சிக்கான சின்னத்தை தேர்தல் அலுவலர் ஒதுக்கீடு செய்வார். ஆனால், நயினார் நாகேந்திரனுக்கு கட்சி தலைமை கடிதம் அளிக்காததால், `பி’ படிவத்தை அவர் வேட்புமனுவுடன் அளிக்கவில்லை. தற்போதைக்கு அவர் சுயேச்சை வேட்பாளராகவே கருதப்படுவார். எனினும், வேட்புமனு பரிசீலனைக்கு முன் வரை அவர் கட்சியின் கடிதத்தை அளிக்க வாய்ப்புள்ளது.

இச்சம்பவம் அதிமுக கூட்டணிக்கும், பாஜக தலைமைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x