Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

அமமுகவுடனும் கூட்டணி இல்லை; சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி?- நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல்

அமமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடவுள்ளதாக தெரிகிறது. மேலும், தேமுதிக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான, வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ளது. இருப்பினும், தேமுதிகவில் கூட்டணியா? தனித்து போட்டியிடுவதா என நேற்று மாலை வரையில் இழுபறி நீட்டித்து வந்தது.

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக, இந்த சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என தெரிவித்திருந்தது.

3 கட்ட பேச்சுவார்த்தை

இதற்கிடையே, அதிமுகவுடன்நடைபெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், இந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கடந்த 9-ம் தேதி அறிவித்திருந்தது. கூடுதல் தொகுதிகள் மற்றும் கேட்ட தொகுதிகள் ஒதுக்காததே காரணம் என தேமுதிக அதிருப்தி தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து தேமுதிக அமமுகவுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தியது. தொகுதிகள் எத்தனை, எந்தெந்த தொகுதிகள் உள்ளிட்டவை குறித்துபேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. “தேமுதிகவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று (நேற்று)மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும்’’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று மதியம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைந்து, தொகுதி பங்கீடு வெளியாகும் எனஇரு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.

முன்னேற்றம் இல்லை

ஆனால், அமமுகவுடனும் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அமமுகசார்பில் நேற்று மாலை 3-வது கட்டமாக 130 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவித்தது. இதனால், இந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்படுகிறது.

எனவே, தேமுதிக வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்துபோட்டியிடும் என தெரிகிறது.கூட்டணி பற்றி இதுவரையில் எந்த முடிவும் ஏற்படவில்லை, விரைவில் அதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்போம். மேலும், தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் நாளை (14-ம் தேதி) வெளியாகும் என தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவை ஏற்க வேண்டும்

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறைவால், மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வருகிறார். அவர் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் இருப்பது, எங்களுக்கு கவலையாக இருக்கிறது. வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதுபோல் தெரிகிறது.

தேர்தல் செலவுகளை மேற்கொள்வதற்கான பொருளாதார நெருக்கடி சிக்கலாகவும், பெரும்சவாலாகவும் இருக்கும். இருப்பினும், கட்சி தலைமை எடுத்திருக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். தேர்தல் செலவை கட்சி ஏற்றுக் கொண்டால், நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்றுவார்கள்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x