

‘தமிழகத்தில் இப்போது நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும்இடையிலானது. அதிமுகவுக்கு வாக்கு அளித்து தர்மத்தை வெற்றிபெறச் செய்யுங்கள்’ என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடியில் முதல்வர் பழனிசாமி நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின்போது அவர்பேசியதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளில் இங்கு முதல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறேன்.
திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக அரசு மீது பல்வேறுகுற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவரை என்னுடன் நேருக்குநேர்விவாதம் நடத்த வரவேண்டும்என்று கூறியிருக்கிறேன். அதிமுகஅரசின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் கூறுகிறேன். திமுக ஆட்சியில் அவர்கள் செய்ததவறுகள் மீது வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அது குறித்து நேருக்கு நேர் விவாதத்தில் ஸ்டாலின் விளக்கமளிக்க முடியுமா?
அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொறுத்துக் கொள்ளமுடியாமல் ஸ்டாலின் பொய் பரப்புரை மேற்கொண்டு உள்ளார். எத்தனை பொய்களை கூறினாலும் தர்மம் வென்றதுதான் வரலாறு.
தமிழகத்தில் மாணவர்கள் நன்கு படிப்பதற்காக ரூ.7,337 கோடி செலவில் 52.31 லட்சம் மடிக்கணினிகள் அதிமுக அரசால் வழங்கப்பட்டுள்ளன. இதுபோலபல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் நிலம் இல்லாதவர்களுக்கு இரண்டுஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று திமுகவினர் கூறினார்களே அதை நிறைவேற்றினார்களா?
திமுக என்பது வாரிசு குடும்பமாக இருக்கிறது. கருணாநிதி அவருக்குப் பிறகு ஸ்டாலின் . இப்போது உதயநிதி என வாரிசு அரசியல் தொடர்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டாலின் பேசும்போது என் குடும்பத்தில் இருந்து எவரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று கூறினார். பொதுமக்களை ஏமாற்றி இப்போதுவாரிசு அரசியல் நடத்துகிறார்.
மக்கள் நிம்மதியாக வாழவேண்டும். மீண்டும் கட்டப்பஞ்சாயத்து, நிலம் அபகரிப்பு போன்ற பிரச்சினைகள் வரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்