

புதுவை முன்னாள் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் இணைந்தார்.
சட்டப்பேரவை தேர்தல் அறி விப்புக்கு முன்பாகவே புதுவையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங் கியது. காங்கிரஸ் முன்னாள் அமைச் சர்கள், எம்எல்ஏக்கள் பதவி விலகி பாஜக, என்ஆர் காங்கிரஸில் இணைந்தனர். இதனால் ஆட்சி கவிழ்ந்தது. கட்சியின் நிர்வாகிகள் பலர் காங்கிரஸிலிருந்து விலகினர். இதனால் காங்கிரஸ் நிலைகுலையும் அளவுக்கு சென்றது.
இந்நிலையில் நேற்று காங்கிரஸ் - திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானது. இதைத்தொடர்ந்து முன்னாள் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் கட்சியிலிருந்து விலகி,தனது மனைவி மற்றும் ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு சென்று காங்கிரஸில் இணைந்தார்.
லாஸ்பேட்டை தொகுதியில் கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வைத்தியநாதன். 2016-ல் மீண்டும் போட்டியிட என்ஆர் காங்கிரஸில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால்என்ஆர் காங்கிரஸில் இருந்து விலகி, சுயேட்சையாக போட்டியிட்டு 2-வது இடத்தை பிடித்தார். இதைத்தொடர்ந்து, 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் என்ஆர் காங்கிரஸில் இணைந்தார்.
இந்நிலையில் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட வைத்தியநாதனுக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அந்த தொகுதி கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், என்ஆர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்து நேற்று காங்கிரஸில் இணைந்தார். மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் தனது ஆதரவாளர்களோடு அவர் இணைந்தார்.
காங்கிரஸில் இணைந்தது பற்றி வைத்தியநாதன் கூறுகையில், “அரசியல் வியாபாரிகளிடமிருந்து லாஸ்பேட்டை தொகுதியையும், மக்களையும் பாதுகாப்பதற்காக காங்கிரஸில் இணைந்துள்ளேன். புதுவையில் மதசார்பில்லாத ஒரு ஆட்சி அமைய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.