மன்னார்குடியில் அதிமுக வேட்பாளர்களுடன் சென்று எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த அமைச்சர்

மன்னார்குடியில் அதிமுக வேட்பாளர்களுடன் சென்று எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த அமைச்சர்
Updated on
1 min read

அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று அதிமுக வேட்பாளர்களுடன் சென்று மன்னார்குடியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர் ஆர்.காமராஜ், சென்னையில் சிகிச்சைப் பெற்று பூரண உடல்நலம் பெற்ற பின்னர், முதன்முறையாக தனது சொந்த ஊரான மன்னார்குடிக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். பின்னர், நேற்று தனது வழக்கமான கட்சிப் பணிகளையும் தொடங்கினார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் தொகுதியில் போட்டியிட உள்ள அமைச்சர் காமராஜ் மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மன்னார்குடி- சிவா.ராஜமாணிக்கம், திருத்துறைப்பூண்டி- சி.எஸ்.சுரேஷ்குமார், திருவாரூர்-ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோருடன் மன்னார்குடி கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று கோபாலசமுத்திரம் கீழவீதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர், மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அப்போது, அமைச்சர் ஆர்.காமராஜ் பேசும்போது, ‘‘அதிமுகவினர் தொய்வின்றி தேர்தல் பணியாற்ற வேண்டும். நான் நன்னிலத்தில் போட்டியிட்டாலும் திருவாரூர் மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் நானே வேட்பாளராக நிற்பதாகக் கருதி, தொண்டர்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

கருத்து வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வெற்றி பெறுவது ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு பணியாற்ற வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in