திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளை விவாதிப்போம் வாருங்கள்: ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு

திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளை விவாதிப்போம் வாருங்கள்: ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு
Updated on
1 min read

"நீங்கள் எங்கள் அரசாங்கம் மீது சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பதில் சொல்கிறேன், திமுக ஆட்சியிலே, உங்கள் அமைச்சர்கள் என்னென்ன செய்தார்கள் என்தைப்பற்றியும் விவாதிப்போம்" என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

கங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக நல்ல தம்பியை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

“திமுக இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்தது என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்களுடைய ஒரே குறிக்கோள் கொள்ளையடிப்பது தான். ஊழல் செய்வது தான். அதைத்தான் லட்சியமாக கொண்டிருந்தார்கள், அவர்கள் ஆட்சியிலே. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசாங்கம் என்றால் அது திமுக அரசு தான்.

இன்றைக்கு தமிழகத்திலேயே வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் அவர்கள், அதிமுக அரசு மீது குற்றம் சுமத்தி கொண்டிருக்கின்றார். நீங்கள் எந்த குற்றச்சாட்டு சொன்னாலும் அதற்கு பதில் சொல்ல நான் தயாராக இருக்கின்றேன். மேடையை வாழப்பாடியிலே போட்டுக் கொள்ளலாம்.

நீங்கள் ஒரு மைக்கை பிடியுங்கள், நான் ஒரு மைக்கை பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் எங்கள் அரசாங்கம் மீது சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பதில் சொல்லத் தயாராக இருக்கின்றேன். டெண்டர் ரத்து செய்தது கூட தெரியாமல், ஆளுநரிடம் ஊழல் நடந்திருப்பதாக ஒரு பொய்யான புகாரை அளித்துள்ளார். நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கின்றார் ஸ்டாலின்.

திமுக ஆட்சியிலே, உங்கள் அமைச்சர்கள் என்னென்ன தவறு செய்தார்கள், அவர்கள் மீது என்னென்ன வழக்குகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த வழக்குகள் எல்லாம் இன்றைக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. அதைப்பற்றி விவாதிப்போம். இன்றைக்கு காலையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் நான் குறிப்பிட்டேன்.

அதற்கு பதிலே வரவில்லை. அதிமுக அரசு மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. அதைப் பொறுக்க முடியாமல் ஸ்டாலின் , செல்லுகின்ற இடங்களில் எல்லாம் பொய் செய்திகளை பரப்பி வருகிறார். ஸ்டாலின் அவர்களே நீங்கள் எத்தனை பொய் சொன்னாலும் எடுபடாது.

தர்மம், நீதி, உண்மை தான் வெல்லும் என்ற வரலாறு உண்டு. நாங்கள் உண்மையை பேசுகின்றோம். எதை சொல்லுகின்றோமோ, அதை செய்கின்றோம். திமுக அப்படி அல்ல, அவர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று.

அதிமுக தேர்தல் வருகின்ற போது ஒரு பேச்சு, தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு, என்று செயல்படுகின்ற அரசு அல்ல. தேர்தல் அறிக்கையில் என்ன வாக்குறுதிகளை கொடுக்கின்றோமா, அதை எல்லாம் நிறைவேற்றுகின்ற ஒரே அரசாங்கம் அதிமுக அரசாங்கம் தான்”.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in