Published : 12 Mar 2021 09:16 PM
Last Updated : 12 Mar 2021 09:16 PM

கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால் இடைத்தேர்தலில் வென்ற திமுக எம்எல்ஏவுக்கு ‘சீட்’ இல்லை: திருப்பங்கள் நிறைந்த திருப்பரங்குன்றம் தொகுதி

மதுரை

திமுக கூட்டணியில் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அந்தத் தொகுதியின் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் அதிருப்தியடைந்துள்ளார்.

மதுரையில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சி புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ போட்டியிடுகிறார்.

இவர் கடந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை அங்கிருந்து தொகுதி மாறி திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுகிறார்.

அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் காளிமுத்து மகன் டேவிட் அண்ணாத்துரை போட்டியிடுகிறார்.இவர், அமமுக சார்பில் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 85,747 வாக்குகள் பெற்றவர்.

திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் இறந்ததால் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் ஆளும்கட்சி அதிகாரம் பலம், பணத்தைத் தாண்டி வெற்றி பெற்றார். அதிமுக 8 முறை வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்றதால் இந்த முறை மீண்டும் திமுகவே நேரடியாக போட்டியிடும் என்றும், அக்கட்சி சார்பில் தற்போதைய எம்எல்ஏ டாக்டர் சரணவனே நிறுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

கடைசி நேரத்தில் இந்தத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் டாக்டர் சரவணனுக்கு, திருமங்கலம், மதுரை வடக்கு தொகுதி ஆகிய இரண்டில் ஒன்றில் நிற்க ‘சீட்’ வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திமுக அதிரடியாக அவருக்கு ‘சீட்’ வழங்கவில்லை. அதனால், அவர் மிகுந்த அதிருப்தியடைந்துள்ளார். அவரது ஆதரவாளர்கள் அவரை திருப்பரங்குன்றம் தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்க வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், அவரோ அரசியலை விட்டு விலகி மீண்டும் மருத்துவத் தொழிலிலேயே முழு நேரமும் ஈடுபடாம் என்று விரக்தியில் இருக்கிறார்.

அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடந்தபோது பணம் செலவு செய்ய வேண்டும், ஆளும்கட்சியான அதிமுகவின் அதிகார பலத்தை எதிர்த்து நிற்க வேண்டும் என்று திமுகவில் யாரும் போட்டியிட ஆர்வப்படவில்லை.

ஆனால், சரவணன் போட்டியிட ஆர்வமாக ‘சீட்’ கேட்டார். அப்படியிருந்தும் திமுக நிர்வாகிகள் சிலர் உள்ளடி வேலை பார்த்தனர். அதையும் மீறி வெற்றி பெற்றார். அவர் எம்எல்ஏவாக குறுகிய காலம் இருந்தாலும் திருப்பரங்குன்றம் மட்டுமில்லாது மதுரை மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு தன்னுடைய மருத்துவத்தொழில் மூலம் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். ஆனால், அவருக்கு கட்சித் தலைமை ‘சீட்’ மறுத்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை, ’’ என்றார்.

இதுகுறித்து டாக்டர் சரவணனிடம் பேசியபோது, ‘‘திருப்பரங்குன்றத்தில் மீண்டும் நான் போட்டியிட்டால் வெற்றி பெறுவேன். ஆனால், கூட்டணிக்கு ஒதுக்கியதால் திருமங்கலம் அல்லது வடக்கு தொகுதி கேட்டேன். தற்போது அங்கும் ‘சீட்’ மறுக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனையாக உள்ளது.

இது சம்பந்தமாக கட்சித் தலைமையில் பேசவில்லை. அரசியலில் எதுவும் நடக்கும் என்பதற்கு நானும் ஓர் உதாரணம். அரசியலில் மற்றவர்களை போல் நான் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த பதவியை வைத்து கூடுதலாக ஏழைமக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதில் ஏமாற்றம்தான். அதற்காக தவறான முடிவு எடுக்க மாட்டேன். அரசியலில் சோபிக்கமுடியாவிட்டாலும் மருத்துவத்தொழில் மூலம் ஏழைகளுக்கு தொடர்ந்து சேவை செய்வேன், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x