

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தங்கதமிழ்ச்செல்வனும் அதிமுகவில் இருந்த போதே எதிரும்புதிருமாக செயல்பட்டுவந்தார்கள். ஜெயலலிதா இருந்தநிலையிலும் தேனி மாவட்டத்தில் இரு அணிகளாகவே செயல்பட்டனர்.
இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தங்கதமிழ்ச்செல்வன் அமமுகவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கிருந்தபடியே ஓ.பன்னீர்செல்வத்தின் மீது கடும் விமர்சனங்களைத் தொடர்ந்தார். சிரித்தபடி, மிக இயல்பாக இவர் தொடுக்கும் குற்றச்சாட்டுக்களை ரசித்த திமுக.தன் பக்கம் இவரை இழுத்துக் கொண்டது. அங்கும் இவர் தனது பாணியில் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்தார்.
மொத்தத்தில் எந்தக் கட்சியில் இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கும் மனோநிலையே அவரிடம் இருந்தது. இது திமுகவிற்கு மிகவும் பிடித்துப்போனது. எனவே மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர் பதவி கொடுத்தது. பின்பு வடக்கு மாவட்ட பொறுப்பாளராக மாற்றி ஓ.பன்னீர்செல்வத்தை இவர் மூலம் நேரடியாக எதிர்க்க திட்டமிட்டது.
இதற்காக தேனி மாவட்டம் இரண்டாகப்பிரிக்கப்பட்டது. எனவே ஆண்டிபட்டியை விட்டு போடிக்குச் செல்லும் நிலை தங்கதமிழ்ச்செல்வனுக்கு ஏற்பட்டது.
உணர்வு ரீதியாக எதிர்த்தாலும் பொருளாதார ரீதியாக ஓ.பன்னீர்செல்வம் எட்டாத இடத்தில் இருப்பதால் போடியில் போட்டியிட தங்கதமிழ்ச்செல்வனுக்கு சிறிது தயக்கம் இருந்தது. திமுக.தலைமைதான் பேசிப்பேசி இவரை சரிக்கட்டியதாகக் கூறப்படுகிறது.
தற்போது சீர்மரபினர் துணைமுதல்வருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்புக்கொடி, எதிர்பிரசாரம் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். வேளாளர் சமுதாய பெயர் மாற்றம், வன்னியருக்கு உள் இடஒதுக்கீடு பல்வேறு செயல்பாடுகளால் பல சமுதாயத்திலும் அதிமுகவிற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. போதாக்குறைக்கு பாஜக.வுடன் அதிமுக.கூட்டணியில் வைத்துள்ளதால் இஸ்லாமியர் ஓட்டுக்களும் பிரியும். சிலிண்டர், பெட்ரோல்விலை உயர்வு போன்றவற்றை முன்னுறுத்தி பிரச்சாரம் செய்தால் வெற்றி நிச்சயம் என்று சாதகங்களை பட்டியலிட்டு தங்கதமிழ்ச்செல்வனுக்கு தைரியம் அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவரின் போட்டி ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடும் தேர்தல் நெருக்கடியைத் தரும் என்று திமுக.வினர் நம்புகின்றனர்.
அதிமுக.தரப்பினர் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்று தனி மரியாதை கட்சி மட்டுமல்லாது, பொதுவெளியிலும் உள்ளது. அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை இங்கு செயல்படுத்தி உள்ளார்.
எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவிற்கு ஏராளமான கல்விநிறுவனங்களை இங்கு கொண்டு வந்துள்ளார். பல கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாணை வெளியிட்டுள்ளார். வெறும் குற்றச்சாட்டுக்களும், ஆவேச பேச்சும் இத்தேர்தலில் பலனிக்காது என்றனர்.