

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தொடர்ந்து மூன்று முறை வென்ற கே.ஆர்.பெரியகருப்பனுக்கும், மானாமதுரையில் கடந்த முறை சீட் கிடைக்காத முன்னாள் அமைச்சர் தமிழரசிக்கும் இம்முறை மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த கே.ஆர்.பெரியகருப்பன். இவர் 2006, 2011, 2016 எனத் தொடர்ந்து மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 2006-11 வரை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் 4-வது முறையாக அவருக்கு மீண்டும் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக மருதுஅழகுராஜ் போட்டியிடுகிறார்.
இதனால் இத்தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல் கடந்த 2006-ம் ஆண்டு மதுரை மாவட்டம் சமயநல்லூர் (தனி) தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரானவர் தமிழரசி.
தொகுதி சீரமைப்பில் சமயநல்லூர் தொகுதி இல்லாமல் போனதால் 2011-ம் ஆண்டு தேர்தலில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) தொகுதியில் தமிழரசி போட்டியிட்டு தோற்றார்.
அதன்பிறகு 2016-ம் ஆண்டு தேர்தலில் தமிழரசி மீண்டும் சீட் கேட்டார். ஆனால் அவருக்கு மறுக்கப்பட்டு சித்ராசெல்விக்கு கொடுக்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மானாமதுரை இடைத்தேர்தலிலும் சீட் கேட்டார். ஆனால் அவருக்கு மறுக்கப்பட்டு இலக்கியதாசனுக்கு சீட் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் மீண்டும் தமிழரசிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.