Published : 12 Mar 2021 06:55 PM
Last Updated : 12 Mar 2021 06:55 PM

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான டிஜிபியை இதுவரை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்?- உயர் நீதிமன்றம் கேள்வி

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபி-யை இதுவரை ஏன் பணியிடை நீக்கம் செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் எஸ்.பி. ஒருவர் காவல் துறை தலைவர் திரிபாதி, தலைமைச் செயலர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் வெளியே கசிந்த நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பந்தப்பட்ட சிறப்பு டிஜிபியை பணியிடை நீக்கம் செய்து குற்றவழக்கு பதிவு செய்யவேண்டும் இல்லாவிட்டால் திமுக பெரும் போராட்டம் நடத்தும் என திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புகார் அளிக்க வந்தபோது செங்கல்பட்டு எஸ்.பி தலைமையிலான போலீஸார் பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தி மிரட்டியதாக புகார் வெளியானது. இதையடுத்து, சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். புகாரை விசாரிக்க, கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டது.

சிபிசிஐடி போலீஸாருக்கு வழக்கு மாற்றப்பட்டு பெண் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பெண் எஸ்.பி. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான விவகாரத்தில் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

வழக்கை விசாரித்த அவர் வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும், வழக்கு சம்பந்தப்பட்ட தகவல்களை அவ்வப்போது அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும், வழக்கில் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட, குற்றம்சாட்டப்பட்ட யாரையும் எவ்விதத்திலும் அடையாளப்படுத்தக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.

இந்நிலையில் சிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை தாமாக முன் வந்து வழக்காக பதிவு செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷே விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி அனுமதி அளித்ததன் அடிப்படையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விசாகா குழுவில் உள்ள ஒருவர் எவ்வித விசாரணையும் இல்லாமல் தன்னை தூக்கிலிட வேண்டுமென வாட்ஸ் அப்பில் விமர்சிக்கிறார் என சிறப்பு டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி, பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க வந்த பெண் அதிகாரியை தடுத்தார் என செங்கல்பட்டு எஸ்.பி.-யை மட்டும் சஸ்பெண்ட் செய்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீதான விசாரணை அறிக்கையை மார்ச்-16ல் தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை உயர் நீதிமன்றம் உன்னிப்பாக கண்காணிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x