நெல்லை மாவட்டத்தில் திமுக சார்பில் 3 பழைய முகங்கள், ஒரு புதியவர் போட்டி

நெல்லை மாவட்டத்தில் திமுக சார்பில் 3 பழைய முகங்கள், ஒரு புதியவர் போட்டி
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் பழைய முகங்களாகவும், ஒருவர் புதியவராகவும் உள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய 4 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன், அம்பாசமுத்திரம் தொகுதி வேட்பாளர் இரா. ஆவுடையப்பன், ராதாபுரம் தொகுதி வேட்பாளர் மு. அப்பாவு ஆகியோர் ஏற்கெனவே இத் தொகுதிகளில் பலமுறை போட்டியிட்டுள்ளனர். பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் அப்துல்வகாப் புதுமுகமாக களமிறங்குகிறார்.

திருநெல்வேலி தொகுதி:

இத் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் (56), தற்போது இத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். பாளையங்கோட்டையைச் சேர்ந்த இவர் பிஎஸ்சி பட்டதாரி. இவரது தந்தை ஏ.எல். சுப்பிரமணியன் திருநெல்வேலி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர். திருநெல்வேலி மாநகராட்சி மேயராகவும் பணியாற்றியவர். கட்சியில் மாநகர செயலராக பொறுப்பு வகிக்கும் லட்சுமணன், 2011 தேர்தலில் தோல்வியை தழுவியிருந்தார். 2016 தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது 3-வது முறையாக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு தேவிமுத்துமீனா என்ற மனைவியும், சுபத்னா, அபிராமி ஆகிய மகள்களும் உள்ளனர்.

ராதாபுரம் தொகுதி:

ராதாபுரம் தொகுதி வேட்பாளர் மு. அப்பாவு (69) ராதாபுரம் தாலுகா பணகுடி லெப்பை குடியிருப்பை சேர்ந்தவர். இத்தொகுதியில் கடந்தமுறை திமுக சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த வெற்றியை எதிர்த்து அப்பாவு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில்தான் மீண்டும் அவர் திமுக சார்பில் களமிறங்குகிறார். அரசியலுக்கு வருமுன் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டார். பின்னர் தமாகாவில் இணைந்தார். 1996-ல் அக் கட்சி சார்பில் எம்.எல்.ஏ ஆகவும், 2001-ல் சுயேச்சை எம்எல்ஏ ஆகவும் வெற்றிபெற்றிருந்தார். 2006-ல் இத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 15 ஆண்டுகள் தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்த அப்பாவு தற்போது திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக அவை தலைவராகவும், திமுக மாநில தணிக்கை குழு உறுப்பினராகவும், ஊடக தொடர்பாளராகவும் உள்ளார். கிறிஸ்த நாடார் வகுப்பை சேர்ந்த இவருக்கு விஜயா என்ற மனைவியும், அலெக்ஸ் ராஜா, ஆரோக்கிய ராகுல், பிரியங்கா ஆகிய 3 பிள்ளைகளும் உள்ளனர்.

அம்பாசமுத்திரம் தொகுதி:

அம்பாசமுத்திரம் தொகுதி வேட்பாளர் இரா. ஆவுடையப்பன் (77) இத் தொகுதியில் கடந்த சட்டப் பேரவை தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தவர். வழக்கறிஞரான இவர் 2006-2011 வரையில் தமிழக சட்டப் பேரவை தலைவராக இருந்துள்ளார். அத்துடன் 1996 தேர்தலிலும் இத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், மாநில கூட்டுறவு வங்கி துணை தலைவர் பொறுப்புகளையும் வகித்துள்ளார். சென்னையில் சட்டக் கல்லூரியில் படிக்கும்போதே திமுக மாணவரணி தலைவராக இருந்து செயல்பட்டுள்ளார். இவருக்கு ஏ. ராமலட்சுமி என்ற மனைவியும், வழக்கறிஞர்கள் ஆ. பிரபாகரன், ஆ. செல்வேந்திரன் ஆகிய மகன்களும், சாந்தி பாண்டின் என்ற மகளும் உள்ளனர்.

பாளையங்கோட்டை தொகுதி:

திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த மு. அப்துல்வகாப் (54) புதுமுக வேட்பாளராக களமிறங்குகிறார். பி.காம். படித்துள்ள இவரது மனைவி அ. ஹாஜரா பேகம், அ. முஸம்மில் அகமது, அ. முஸ்தாக் அகமது ஆகிய இருமகன்கள் உள்ளனர். பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பயின்றபோதே திமுக மாணவரணி செயலாளராக அரசியல் பயணத்தை தொடங்கியிருந்தார். பின்னர் நகர மாணவரணி, இளைஞரணிகளில் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2006-2011-ல் மாநகராட்சி கவுன்சிலராகவும், 2011-2014-ல் கட்சியில் மாநகர பொறுப்பாளராகவும் இருந்தார். 2014 முதல் மத்திய மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in