

புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 18 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இக்கூட்டணியில் இரு இடங்கள் சோசலிஸ்ட் கம்யூனிஸ்ட் (எஸ்யூசிஐ) ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களும் மக்கள் நீதி மய்ய சின்னத்திலேயே போட்டியிட உள்ளனர். கட்சித்தலைவர் கமல்ஹாசன் விரைவில் புதுச்சேரி வந்து பொதுக்கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட உள்ளதாக மாநில செயலாளர் சந்திரமோகன் தெரிவித்தார்.
இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி மாநில செயலாளர் சந்திரமோகன் இன்று (மார்ச் 12) கூறியதாவது:
"புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, சோசலிஸ்ட் கம்யூனிஸ்ட் (எஸ்யூசிஐ) ஆகியவை இடம் பெற்று புதிய கூட்டணி அமைத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், இன்று முதல்கட்ட பட்டியலில் 18 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், 17 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியையும், ஒருவர் கூட்டணிக்கட்சியான சுசி கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்ந்தவர்கள். அனைவரும் மக்கள் நீதி மய்யம் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள்.
திருபுவனை - ரமேஷ், வில்லியனூர் - பானுமதி, உழவர்கரை - பழனிவேலன், கதிர்காமம் - சதானந்தம், இந்திரா நகர் - சக்திவேல், தட்டாஞ்சாவடி - ராஜேந்திரன், லாஸ்பேட் - சத்தியமூர்த்தி, காலாப்பேட் - சந்திர மோகன், ராஜ்பவன் - பர்வதவர்தினி, உப்பளம் - சந்தோஷ்குமார், உருளையன்பேட் - சக்திவேல், நெல்லித்தோப்பு - முருகேசன், அரியாங்குப்பம் - ருத்ரகுமார், ஏம்பலம் - சோம்நாத், நெட்டபாக்கம் - ஞானஒளி, நெடுங்காடு - நரசிம்மன். முதலியார்பேட் - அரி கிருஷ்ணன், இவர்கள் 17 பேரும் மக்கள் நீதிமய்யத்தை சேர்ந்தவர்கள். காமராஜ் நகர் - லெனின் மட்டும் சுசி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். இக்கட்சிக்கு காமராஜ்நகர், முத்தியால்பேட் ஆகிய தொகுதிகள் தரப்பட்டுள்ளன. முதல் பட்டியலில் காமராஜர் நகர் வேட்பாளர் இடம் பெற்றார். அடுத்த பட்டியலில் முத்தியால்பேட் வேட்பாளர் இடம் பெறுவார். அடுத்த பட்டியல் இன்று வெளியாகும். விரைவில் புதுச்சேரிக்கு கட்சித்தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்திலும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.