

மேல்அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 28-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங் கியது. கடந்த ஒரு வாரமாக தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேல்அடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று கூறியதாவது:
லட்சத்தீவு கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த மேல் அடுக்கு சுழற்சி வடக்கு நோக்கி நகர்ந்து இன்று (2-ம் தேதி) காலை கர்நாடகம் அருகே அரபிக்கடலில் நிலைகொண் டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றின் திசை மாறுவதாலும், மேல்அடுக்கு சுழற்சி அரபிக்கடல் பகுதிக்கு சென்றுள்ளதாலும் 2 நாட்களுக்குப் பிறகே மழை குறை வதற்கான வாய்ப்பு இருக்கும். சென்னையைப் பொறுத்தவரை அவ்வப்போது மழையோ, கனமழையோ பெய்யும்.
இவ்வாறு ரமணன் கூறினார்.
திங்கள்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக இரணியலில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மதுராந்தகம், கோவையில் 10, மணல்மேல்குடி, செங்கல்பட்டு, நாகை, பெரிய நாயக்கன்பாளையத்தில் 8, மயிலாடியில் 7, சென்னை கிண்டி, தாம்பரம், மீனம்பாக்கம், அரக்கோணம், உத்திரமேரூர், திருத்தணி, நாங்குநேரியில் 6, குடவாசல், மேட்டுப்பாளையம், பாலக்கோடு, மரக்காணம், சென்னை மெரினாவில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னையில் பள்ளி, கல்லூரி களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. செமஸ்டர் தேர்வுகள் வழக்கம்போல நடந்தன.