Published : 12 Mar 2021 05:37 PM
Last Updated : 12 Mar 2021 05:37 PM

பாஜக வேட்பாளராக அறிவிக்கும் முன்பே வேட்புமனுத் தாக்கல் செய்தது ஏன்?- நயினார் நாகேந்திரன் விளக்கம்

பாஜக வேட்பாளர் பட்டியல் இதுவரை வெளியாகாத நிலையில் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜக, திருநெல்வேலி உள்ளிட்ட 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் 10-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் பாஜக வேட்பாளர் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை.

பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், தேசியப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சரும் கன்னியாகுமரி மக்களவை வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் அடங்கிய குழுவினர் இன்று டெல்லி சென்றுள்ளனர். இதில், வேட்பாளர்களின் சாதக, பாதகங்களை அறிந்து இறுதிப் பட்டியலை பாஜக மத்தியத் தேர்தல் குழு வெளியிட உள்ளது. இப்பட்டியல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிடையே பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் சத்தமில்லாமல் மகனுடன் மட்டும் வந்து இன்று திருநெல்வேலியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாகத் தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய அவர், ''இன்று நல்ல நாள் என்பதால்தான் வேட்பு மனுத் தாக்கல் செய்தேன். விரைவில் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும். அதன்பிறகு இதுகுறித்துப் பேசுகிறேன்'' என்று தெரிவித்தார்.

கடந்த 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.எல்.லட்சுமணனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தோல்வியைத் தழுவினார். இம்முறையும் திமுக சார்பில் ஏ.எல்.லட்சுமணன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x