சென்னையை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் தந்தை, மகன் இருவரும் தேர்தலில் போட்டி 

ஐ.பெரியசாமி (ஆத்தூர்), இ.பெ.செந்தில்குமார்(பழநி) 
ஐ.பெரியசாமி (ஆத்தூர்), இ.பெ.செந்தில்குமார்(பழநி) 
Updated on
1 min read

திமுக சார்பில் சென்னையில் தந்தை, மகனான மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஒரே தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் ஐ.பெரியசாமி, இ.பெ.செந்தில்குமார் ஆகிய இருவரும் ஒருசேரப் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.கருணாநிதி திருவாரூர் தொகுதியிலும், இவரது மகன் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி ஆத்தூர் தொகுதியிலும், இவரது மகன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் பழநி தொகுதியிலும் போட்டியிட்டனர். இவர்கள் நால்வரும் வெற்றிபெற்றனர்.

இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தந்தை, மகன்கள் போட்டியிட உள்ளனர். ஆனால் கடந்த முறை மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என்று இருந்த வரிசை, தற்போது மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என மாறியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதேபோல் இந்த முறையும் திண்டுக்கல் மாவட்டத்தில் தந்தை, மகன் இருவர் திமுக சார்பில் களம் இறங்கியுள்ளனர். கடந்த முறை போட்டியிட்ட அதே ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமியும், அவரது மகன் இ.பெ.செந்தில்குமார் பழநி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்திலேயே தந்தை, மகன் போட்டியிடும் தொகுதிகள் சென்னையை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில்தான் உள்ளன. வேறு எங்கும் இதுபோல் தந்தை, மகன் இருவரும் ஒரே நேரத்தில் போட்டியிடவில்லை.

இதற்கு முன்பு சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா ஆகியோர் போட்டியிட்டு இருவரும் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in