

ஹரியாணா முன்னாள் முதல்வர் பெண்களை இழிவுப்படுத்தியதாக குற்றம் சாட்டி புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகம் முன்பு பாஜக மகளிர் அணியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து குப்பைத்தொட்டி, செருப்பை மாறி, மாறி வீசிக்கொண்டனர்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீட்டை முடித்து புதுச்சேரி திரும்பியுள்ளனர். இச்சூழலில் புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடத்திக்கொண்டு இருந்தனர். அப்போது பாஜக மகளிர் அணியினர் காங்கிரஸ் அலுவலகம் முன்பு வந்து போராட்டத்தை திடீரென்று நடத்தினர். அப்போது கட்சி நிர்வாகிகள் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து எதற்காக போராட்டம் என்று கேட்டனர்.
அதற்கு பாஜக மகளிர் அணியினர், "ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹோடா மகளிர் தின விழாவில் மகளிரை அவமானப்படுத்தியதை கண்டித்து போராட்டம் நடத்துவதாக குறிப்பிட்டனர்" அதைத்தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸார் அங்கிருந்த குப்பைத்தொட்டியை எடுத்து வீசினர். பதிலுக்கு அதை எடுத்து மகளிர் அணியினரும் வீசினர். பின்னர் செருப்புகளையும், பூத்தொட்டிகளையும் மாறி , மாறி வீசிக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பெரியக்கடை போலீஸார் இருவரையும் கலைந்து போக செய்தனர். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சி அலுவலகம் வெளியே பாஜகவை கண்டித்து கோஷம் எழுப்ப, காங்கிரஸ் அலுவலகம் உள்ள சாலை முனையில் பாஜகவினர் கோஷம் எழுப்ப பதற்றம் ஏற்பட்டது. அதையடுத்து மகளிர் அணி கலைந்து சென்றனர்.
.