

சம்பளத்தை மாதக் கணக்கில் இழுத்தடித்துக் கொடுப்பதாக புகார் கூறுகின்றனர் வனத் துறையில் பணியாற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள்.
இதுகுறித்து கோவை மாவட்ட வனக் கோட்டத்தை சேர்ந்த வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சிலர் கூறியதாவது:
மலைவாழ் மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாங்கள். காடுகள் எங்களுக்குப் பிறவியிலேயே அத்துப்படியான விஷயம். தமிழகம் முழுவதும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் பணியில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு மேல் ஈடுபட்டு வருகிறோம். இதில், 10 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றி நிரந்தரமாகாமல் இருப்பவர்கள் 90 சதவீதம் பேருக்கு மேல் உள்ளோம். தற்போது மாதச் சம்பளம் ரூ.6750. வனத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 1-ம் தேதி சம்பளம் வந்தால் எங்களுக்கு 2 அல்லது 3-ம் தேதிகளில் சம்பளம் கிடைக்கும்.
ஆனால், தற்போதெல்லாம் 2 மாதம் கழித்தே தருகிறார்கள். கேட்டால், அதற்குரிய நிதி வரவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மூன்று மாதத்துக்கு முந்தைய சம்பளத்தை கடந்த மாதம்தான் கொடுத்தார்கள்.
வருடத்துக்கு ‘2 செட் யூனிபார்ம்’ கொடுப்பார்கள். அது வழங்கப்பட்டு 2 வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஊருக்குள் வரும் யானைகளை காட்டுக்குள் விரட்டி விடுவது, காட்டுத் தீயை அணைப்பது, வனத்துக்குள் சமூக விரோதிகள் ஊடுருவல் இருக்கிறதா என்று சோதனையிடுவது, மரக் கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுப்பது வனத்துறை அதிகாரிகள் உட்பட எல்லோருக்கும் காட்டுக்குள்ளே வழிகாட்டுவது எங்கள் வேலை.
யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட மிருகங்கள் வருவதை முன்கூட்டியே அதன் வாசத்தை வைத்து சொல்லிவிடுவோம். ராத்திரி பகல் என குறிப்பிட்ட நேரப் பணியெல்லாம் கிடையாது. 24 மணி நேரத்தில் எப்போது அழைத்தாலும் போகவேண்டும்.
அப்படிப்பட்ட முக்கியமான பணி செய்யும் எங்களுக்கு குறைந்த சம்பளம்தான். அதையும் இப்படி மாதக்கணக்கில் இழுத்தடித்துக் கொடுத்தால் எப்படி? நாங்க 10 முதல் 15 வருஷம் வரை வேலை செய்தாலும் நிரந்தரம் செய்வதில்லை.
ஓய்வு வயதை எட்டுவோருக்கு மட்டும் ஏரியா, பீட் வாட்ச்சர்ன்னு ஒரு பதவியை போட்டு நிரந்தரம் செய்வார்கள். அவர்களும் நான்கு, ஐந்து மாதம் பழைய வேலையை பார்த்துட்டு ஓய்வு பெற்று விடுவார்கள்.
எங்களது கஷ்டத்தை அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்ல என நினைக்கும் போது அதிகாரிகள் அந்த மலைக்கு போங்க, இந்த மலைக்கு போங்க என்று திசைக்கு ஒருவராக பிரித்து அனுப்பி விடுவார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை என்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வேட்டை தடுப்புக் காவலர்கள் பணி என்பது அரசு கொள்கை அடிப்படையிலானது. எங்கள் கையில் எதுவும் இல்லை’ என்றனர்.