Published : 12 Mar 2021 10:29 AM
Last Updated : 12 Mar 2021 10:29 AM

அதிமுக தேர்தல் அறிக்கையைக் கண்டு நாடே வியக்கும்; மக்கள் மனம் குளிரும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு

அதிமுகவின் தேர்தல் அறிக்கையைக் கண்டு நாடே வியக்கப்போகிறது என்றும் மக்களின் மனம் குளிரும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் ஓரணியிலும், திமுக, விசிக, மதிமுக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொமதேக ஆகிய கட்சிகள் இன்னொரு அணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றன.

இதற்கிடையே சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 171 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் 2-வது பட்டியலை அதிமுக நேற்று முன்தினம் அறிவித்தது. இதில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாகவும் தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் உள்ள செங்கோட்டையன் மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் நம்பியூர் பேருந்து நிலையம் அருகே தனது பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார்.

அப்போது அவர் கூறும்போது, ''அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் முக்கியத் திட்டங்களைக் கண்டு நாடே வியக்கப்போகிறது. இன்னும் சில தேர்தல் அறிவிப்புகள் வரப் போகின்றன. உங்களின் (மக்களின்) மனம் குளிரும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும் என்பதை மட்டும் சூசகமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிலர் தேர்தல் அறிக்கையை வெளியிடத் தயக்கம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய தேர்தல் அறிக்கைக்காகப் பிற கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் செய்கின்றன.

அதிமுக ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து இல்லை. 2 ஏக்கர் தருவதாக நாங்கள் ஏமாற்ற மாட்டோம். அடுத்த 5 ஆண்டு கால ஆட்சிக்காக இப்போதே அதிமுக அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x