

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது இன்று தெரியவரும்.
மக்கள் நீதி மய்யம் அதிமுக, திமுக இல்லாமல் மூன்றாவது அணியாகத் தேர்தலில் நிற்கிறது. மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கெனவே வெளியான நிலையில், இன்று இரண்டாம் கட்ட பட்டியல் வெளியாகிறது. சென்னை தியாகராய நகரில் நட்சத்திர ஓட்டலில் பகல் 12 மணிக்கு மநீம 2வது வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிடுகிறார்.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் கமல் பெயர் இல்லை. புதிதாக இணைந்த பழ.கருப்பையா பெயர் இல்லை. புதிதாக இணைந்த கலாம் ஆலோசகர் பொன்ராஜுக்கு அண்ணா நகர் தொகுதியும், செந்தில் ஆறுமுகத்திற்கு பல்லாவரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டது. தொழிற்சங்கத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமிக்கு பெரம்பூர் தொகுதியும், சிநேகனுக்கு விருகம்பாக்கம் தொகுதியும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், கமல்ஹாசன் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் எனத் தெரிகிறது. கமல் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்தத் தேர்தல் அவருக்கு முதல் நேரடி சவால் என்பதால் தொகுதி தேர்வு பலகட்ட ஆய்வுக்குப் பின்னர் முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பெரும்பாலும், சென்னையில் உள்ள தொகுதியிலேயே கமல் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, சுசி கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்று புதிய கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.
தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் நாளை வெளியிடப்படுகிறது. ஒரு நாள் கழித்து இரண்டாவது பட்டியல் வெளியாகும்.