

கரோனா வைரஸ் பிரச்சினை முடியவில்லை. பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நிதி ஆயோக் மூத்த அதிகாரிகள் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகளுடன் மத்தியஅரசு தரப்பில் பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் அதிகரிக்கும் மாநிலங்களின் அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவில் தினசரி கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அந்த மாநிலத்தில் வைரஸுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மத்திய பிரதேசம், குஜராத், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும் வைரஸ் தொற்று ஏறுமுகமாக உள்ளது. கேரளா, உத்தரப் பிரதேசம், மேற்குவங்கத்தில் வைரஸ் பரவல் குறைந்து வருகிறது.
அனைவருக்கும் தடுப்பூசி
கரோனா வைரஸ் பிரச்சினை இன்னும் முடியவில்லை. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கவனக்குறைவாக இருந்து வைரஸ் தொற்றுக்கு ஆளாக வேண்டாம். மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை. மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் பேசி தடுப்பூசியின் விலை ரூ.200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்களில் சுமார்60 சதவீதம் பேருக்கு இரண்டாவது கரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் இதுவரை 2.43 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசு மருத்துவமனைகள் மூலம் 71 சதவீதம் பேருக்கும், தனியார் மருத்துவமனைகள் மூலம் 29 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பல்ராம்பார்கவா கூறும்போது, "மகாராஷ்டிராவில் மரபணு மாறிய கரோனா வைரஸ் பரவவில்லை. எனினும் அந்த மாநிலத்தில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவது மிகுந்தகவலையளிக்கிறது" என்று தெரிவித்தார்.
நிதி ஆயோக் உறுப்பினரும் கரோனா தடுப்பு சிறப்பு குழுவின் தலைவருமான வி.கே.பால் கூறும்போது, "மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பரவல் மிகுந்த கவலையளிக்கிறது. இதை மிக தீவிர பிரச்சினையாக கருதுகிறோம். கரோனா தடுப்பு நடைமுறைகளை பொதுமக்கள் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
முதல்வர் உத்தவ் எச்சரிக்கை
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மும்பை மருத்துவமனையில் நேற்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அந்த பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளன. மூத்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்தால் அடுத்த சில நாட்களில் மேலும் சில இடங்களில் ஊரடங்கு அமல் செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.