தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: முதல்முறையாக வைப்புத்தொகையை ஆன்லைன் மூலம் செலுத்த அனுமதி

தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், உரிய விதிமுறைகளை அமல்படுத்தும் விதமாக தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவு குறியிடப்படுகிறது. இடம்: அரும்பாக்கம். படம்: ம.பிரபு
தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், உரிய விதிமுறைகளை அமல்படுத்தும் விதமாக தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவு குறியிடப்படுகிறது. இடம்: அரும்பாக்கம். படம்: ம.பிரபு
Updated on
2 min read

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. முதல்முறையாக இந்தத் தேர்தலில் வேட்பாளர்கள் வைப்புத் தொகையை (டெபாசிட்) ஆன்லைன் மூலம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 12) தொடங்குகிறது. கரோனா பரவலை கருத்தில்கொண்டு மனு தாக்கலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தினமும் காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். சனி, ஞாயிறு மனு தாக்கல் இல்லை.

தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் வேட்பு மனுக்களை நேரில் பெற்றுக்கொள்ளலாம். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் இருக்கும் வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தை பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்தபின், பிரமாண பத்திரத்தில் நோட்டரி கையொப்பம் பெற்று அதை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்க வேண்டும்.

தேர்தலில் போட்டியிடுவோர் பொது தொகுதிக்கு ரூ.10 ஆயிரம், தனி தொகுதிக்கு ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை (டெபாசிட்) செலுத்த வேண்டும். வழக்கமாக வைப்புத் தொகையை சலான் அல்லது பணமாக செலுத்தலாம். கரோனா பரவல் காரணமாக தற்போது முதல்முறையாக ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் இருவர் மட்டுமேதேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் வர வேண்டும். ஒரே நேரத்தில் பல வேட்பாளர்கள் வருவதைத் தவிர்க்க, ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட நேரத்தை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒதுக்கித் தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின்போது கரோனா வழிகாட்டு நெறிமுறைகள், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்தால் நோய்க்கட்டுப்பாட்டு பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களில் யாரும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பள்ளிவளாக பிரச்சாரம் குறித்து பாஜக அளித்த புகார் தொடர்பாக மாவட்டதேர்தல் அதிகாரியிடம் அறிக்கை பெறப்பட்டு தேர்தல்ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. திமுக விளம்பரம் தொடர்பாகவும் மாவட்ட தேர்தல்அதிகாரிகளிடம் தகவல் கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

தமிழக சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள 118 செலவின பார்வையாளர்கள், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒரு பார்வையாளர் என 119 பேர் இன்று வருகின்றனர். தேர்தல் பாதுகாப்புக்காக 330 கம்பெனி துணை ராணுவத்தை கோரியுள்ளோம். இதுவரை 65 கம்பெனி படையினர் வந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை நடந்த சோதனைகளில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.31 கோடியே 42 லட்சத்து 57 ஆயிரம் ரொக்கம் உட்பட மொத்தம் ரூ.47 கோடியே 65 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மார்ச் 19-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. 20-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. மனுக்களை திரும்பப் பெற மார்ச் 22-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை அவகாசம் வழங்கப்படும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

 இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிகள் தவிர, மக்கள்நீதி மய்யம் கட்சி, அமமுக, நாம்தமிழர் கட்சி என தற்போதைய சூழலில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. முதல் நாளான இன்று சுயேச்சைகள், சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரே நாளில் அதாவது மார்ச் 15-ம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in