

மின் வாரியத்துக்கு ரூ.1,330 கோடிமதிப்புள்ள நிலக்கரி இறக்குமதி நடைமுறையில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் டெண்டர் ரத்து செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக மின் வாரியத்துக்காக ரூ.1,330 கோடி மதிப்பில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. இந்த டெண்டர் நடைமுறையில் மிகப்பெரிய முறைகேடுநடந்துள்ளதாகவும், இதுதொடர்பாக வருவாய் குற்றப்புலனாய்வு இயக்குநரக தலைவர், மத்திய ஊழல் தடுப்பு ஆணையர், தமிழகலஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஆகியோர் அடங்கிய கூட்டு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்என கோரியும் மின் வாரிய முன்னாள் பொறியாளர் செல்வராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தலைமை நீதிபதி சஞ்ஜிப்பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார்ராமமூர்த்தி ஆகியோர் அடங்கியஅமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், வழக்கறிஞர் இ.விஜய் ஆனந்த் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
‘‘குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனத்துக்கு சாதகமாக இந்த டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு இதேபோல அறிவிக்கப்பட்ட நிலக்கரி இறக்குமதி டெண்டரில் ஒரு டன்நிலக்கரிக்கு குறிப்பிட்ட டாலர்மதிப்பில் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறிடெண்டர் அறிவிக்கப்பட்டு குறுகியகாலத்தில் இறுதி செய்யப்பட்டுள்ள தாகவும் இந்திய கணக்கு தணிக்கைத் துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தற்போது அதிக விலைக்கு நிலக்கரியை இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது’’ என்று அவர்கள் வாதிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘‘இந்த டெண்டர் நடைமுறைகள் விதிகளுக்கு உட்பட்டே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை’’ என தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘ஒரு சிலரின் தனிப்பட்ட ஆதாயத்துக்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படக் கூடாது. டெண்டர் முறைகேடு தொடர்பான ஆதாரங்களைமனுதாரர் தரப்பு வரும் 13-ம்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் டெண்டர்ரத்து செய்யப்படும்’’ என்று தெரிவித்து, விசாரணையை வரும் 16-ம்தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.