Last Updated : 12 Mar, 2021 03:12 AM

 

Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM

தமிழக கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: மீண்டும் வலுப்பெறும் பொதுமக்கள், ஆன்மிக ஞானிகளின் கோரிக்கை

கோவை

தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, கலை, இலக்கியத்தன்மை ஆகியவற்றை வெளிக்காட்டுவதில் கோயில்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, தமிழ் கலாச்சாரத்தின் மூலாதாரமாக கோயில்கள் விளங்குகின்றன. கலைகளையும், ஆன்மிகத்தையும் பறைசாற்றும் பழமைவாய்ந்த கோயில்கள் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் உள்ளன.தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற கோயில்கள் பழமைக்கும், கட்டிடம், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

அறநிலையத் துறையின் கணக்கின்படி மாநிலம் முழுவதும் 44,121 கோயில்கள் உள்ளன. சிறிய, நடுத்தர, அதிக அளவில் பக்தர்கள் வரும் பெரிய கோயில்கள் என இவற்றை வகைப்படுத்தலாம். அதுதவிர, தனியார் கோயில்களும் உள்ளன.

மன்னர்கள் காலத்தில் குறுநிலமன்னர்கள், பாளையக்காரர்கள், அரசர்கள்,பேரரசர்கள் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்ட கோயில்கள், ஆங்கிலேயர் ஆட்சியில்சட்டங்கள் மூலம் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டன. தற்போதுதமிழக அரசின் கட்டுப்பாட்டில் கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ‘இந்து சமய அறநிலையத் துறையை கலைத்துவிட்டு, கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்'என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கோயில்களில் ஏற்படும் அசம்பாவிதங்கள், அதிகாரிகளின் அலட்சியம் போன்றவை மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், கோயில்களின் பராமரிப்பு விவகாரம் தொடர்பாக, அரசு சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையும் பக்தர்களிடம் அதிர்ச்சியையும், அறநிலையத் துறையின் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர், எதிர்கட்சித் தலைவருக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சத்குரு கூறும்போது, ‘‘மதத்துக்கும், அரசுக்கும் சம்பந்தம் இருக்கக் கூடாது. அரசாங்கத்தில் மதமோ அல்லது மதத்தில் அரசாங்கமோ கலக்கக் கூடாது. தமிழ்க் கலாச்சாரத்துக்கு மூலமானதாக கோயில்கள் உள்ளன. நம் கலாச்சாரத்தில் கோயிலானது, மக்களுக்கு ஆன்மா போன்றது. இந்த ஆன்மா,அரசின் கையில் அடிமையாக உள்ளது. பல கோயில்கள் பாழடைந்துக் காணப்படுகின்றன. இது தொடர்ந்தால், அடுத்த 50 ஆண்டுகளில் முக்கிய கோயில்களைத் தவிர, மற்றவை அழிந்துவிடும்.

தமிழகத்தில் 11,999 கோயில்கள் ஒருகால பூஜை செய்வதற்குக்கூட வருவாயின்றி தவிக்கின்றன. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 44,121 கோயில்களில், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் பூஜை பணிகளையும், பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ள ஒரு பணியாளருக்கு மேல் நியமிக்க போதிய வருவாய் கிடையாது. 34,093 கோயில்கள் ரூ.10 ஆயிரத்துக்கும் கீழ்ஆண்டு வருவாய் உள்ளதால், தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

கோயில்கள் பக்தர்களின் கட்டுப்பாட்டில் இருந்தால் உயிரோட்டமாகவும், அதிர்வலையோடு சுயசார்புடையதாக இருக்கும். எனவே, ‘கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைப்போம்' என கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும். கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க 8 முதல் 10 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், அப்போது அவை முறையாகப் பராமரிக்கப்படும். இதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x