

நீலகிரி ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட்திவ்யா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்டை மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதற்காக, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில்20 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கண்காணித்து வருகின்றனர்.
முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் முகக்கவசம் அணியாமல்நோயை பரப்புபவர்களுக்கு பொது சுகாதார சட்டத்தின் கீழ் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டசுமார் 12,000 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் அஞ்சல் வாக்களிக்க தேர்தல் பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று12டி படிவங்கள் வழங்கப்படும். தற்போது வரை 2,314 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். மாவட்டத்தில் 37 மையங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்கள பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 28,720 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.
ரூ.80 லட்சம் பறிமுதல்
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு குழுவினர்நடத்திய சோதனைகளில் நீலகிரிமாவட்டத்தில் இதுவரை 52 வழக்குகள்பதிவு செய்யப்பட்டு, ரூ.80 லட்சத்து 28ஆயிரத்து 500 ரொக்கம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 3 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன. கொடிகள், புடவைகள், வேட்டிகள், தட்டுகள், பாத்திரங்கள், குக்கர், பைகள்உட்பட 17 ஆயிரத்து 429 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பணியிடம் ஒதுக்கீடு
மாவட்டத்தில் 868 வாக்குச் சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குச் சாவடிக்கு 4 அலுவலர்கள் என்ற விகிதத்தில் 3,472 அலுவலர்கள் மற்றும் கூடுதலாக 20 சதவீதம் என 696 அலுவலர்கள், ஆக மொத்தம் 4,168 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். சுழற்சி முறையில் வாக்குச்சாவடி அலுவலர்களை 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.