

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60 தொகுதிகளில் போட்டியிடும் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய ஜனநாயகக் கட்சி தொடர்ந்துள்ள வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க நேற்று தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவரான ரவி பச்சமுத்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ கடந்த 2010-ம் ஆண்டு நிறுவனத் தலைவர் பாரிவேந்தரால் தொடங்கப்பட்ட இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) அதே ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் இயற்கை சீற்றங்களின்போது தேவையான சீரமைப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களது கட்சி 60 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.
ஏற்கெனவே கடந்த 2011-ம் ஆண்டு மோதிரம் சின்னமும், 2016-ம் ஆண்டு கத்திரிக்கோல் சின்னமும் எங்களது கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்கப்பட்டது. இதனால் வாக்காளர்கள் எளிதாக எங்களது சின்னத்தில் வாக்களிக்கவும், நாங்களும் சின்னத்தை முன்னிலைபடுத்தி அனைத்து தொகுதிகளிலும் எளிதாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவும் வாய்ப்பாக இருந்தது.
எனவே தற்போது தமிழகத்தில் 40 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 20 தொகுதிகளிலும் ஐஜேகே வேட்பாளர்கள் போட்டியிடவுள்ள நிலையில் இந்த தேர்தலிலும் எங்களது கட்சிக்கு பொது சின்னமாக ஏழு கதிர்கள் கொண்ட பேனா முள் சின்னத்தை வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்.6 அன்று மனு அளித்திருந்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் எங்களது கோரிக்கையை பரிசீலிக்காமல் அந்த சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கியிருப்பதாக தெரிகிறது. வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 12) முதல் தொடங்கவுள்ள நிலையில், அதற்குள் எங்களது கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.வெங்கடேசன் நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார். அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு இன்று (மார்ச் 12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.