Published : 12 Mar 2021 03:13 AM
Last Updated : 12 Mar 2021 03:13 AM

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு அனுமதித்தால் அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்: முன்னாள் எம்பி டி.கே.ரங்கராஜன் கருத்து

பொன்னேரி

காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அனுமதித்தால் விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள் என அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்பி டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட கடற்கரையோர மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் சார்பில், காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நேற்று முன்தினம் பழவேற்காடு பஜாரில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், முன்னாள் எம்பி டி.கே.ரங்கராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துளசி நாராயணன், மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் நித்யானந்தம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் முன்னாள் எம்பி டி.கே.ரங்கராஜன் பேசியதாவது:

கடலோர மக்களின் நலன்களை பலி வாங்கக் கூடிய வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி ’மங்கிபாத்’ நிகழ்ச்சியில் தன் மனதில் நினைப்பதை பேசுகிறாரே தவிர, பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பேசுவது கிடையாது. பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டார்; நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார். தன் நலன்தான் நாட்டின் நலன் என்று நினைக்கக்கூடிய அரசாங்கம் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது.

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு பங்கு இருக்கிறது. இத்துறைமுக விரிவாக்கத்தால், பழவேற்காட்டில் மீன்வளம் அழிந்துவிடும். துறைமுகத்தைச் சுற்றி 5 கி.மீ. தூரத்துக்கு மக்கள் நடமாட தடைவிதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இந்த துறைமுக விரிவாக்கம் விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள் என, அனைவரின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். திருவள்ளூர் மாவட்டம் பாதிக்கும்; தமிழகம் பாதிக்கும்.

இத்துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அனுமதித்தால் காட்டுப்பள்ளி பகுதிகளில் பூச்சி, புழுக்கள் என எல்லாம் அழிந்துவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கத்தால், பழவேற்காட்டில் மீன்வளம் அழிந்துவிடும். துறைமுகத்தைச் சுற்றி 5 கி.மீ. தூரத்துக்கு மக்கள் நடமாட தடைவிதிக்கப்படும் அபாயம் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x